திருவண்ணாமலை: தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை தாண்டி முற்போக்கு ஜனநாயக சக்திகள், சமூகநீதி என பல்வேறு கொள்கைகள் பரப்பும் கட்சிகள் உள்ளனர். இதில், சினிமா புகழை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்ட முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, “தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருவது கண்டனத்துக்கு உரியது. இந்தி அல்லாத பிற மொழி பேசும் மாநிலங்களில் இரு மொழி கொள்கை உள்ளது.
இந்தியை திணிக்க மாட்டோம் என மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு திட்டவட்டமாக ஏற்கெனவே கூறியுள்ளார். ஆனால், தற்பொழுது ஆளும் ஒன்றிய பாஜக அரசு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் மூன்றாவது மொழியாக இந்தியை கற்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. இது இந்துத்துவா செயல் திட்டத்தின் ஒன்று.
பாஜக அரசின் நோக்கம் என்பது ஒரே நாடு, ஒரே மொழி என்ற இலக்கு தான். இந்தி யாவில் எத்தனை மொழிகள் இருந்தாலும் ஒரே மொழி தான் இருக்க வேண்டும் என கருதுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டங்களில் ஒன்றான மும்மொழி கல்வி கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.
தனிநபர் இந்தி கற்றுக் கொள்வதை தடை செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கப் படும் என கூறுவது மிரட்டல் நடவடிக்கை. பி.எம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவினால் மட்டுமே நிதி வழங்கப்படும் என கூறுவதும் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது, ஜனநாயகத்துக்கு விரோதமானது.
வரும் மார்ச் 5-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் நடத்தும் அனைத்துக்கட்சி கூட்டம் இன்றியமையாதது. தமிழ்நாடு முதல்வரின் இந்த முன்னெடுப்பை விடுதலை சிறுத் தைகள் வரவேற்கிறது. இந்த பிரச்சினையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநில முதல்வர்களுடன் தமிழ்நாடு முதல்வர் கலந்தாய்வு செய்ய வேண்டும்.
50 ஆண்டு களுக்கு பிறகு நாடாளுமன்ற தொகுதி வரையறை நடை பெறவுள்ளது. இந்தச் சூழலில் மக்கள் தொகை அடிப்படையில் மறுவரை நடக்குமானால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் 80 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்கும் சூழல் உள்ளது. தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரை செய்தால் தற்போதுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 31- ஆக குறையும் ஆபத்தானது.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 20 அம்ச கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும்போது குடும்ப கட்டுப்பாட்டு திட்டத்தை தீவிரப்படுத்தினார். இந்தியாவிலேயே அதனை தமிழ் நாடு சிறப்பாக நடைமுறைப் படுத்தியது. விஜய் முதலில் தேர்தலை சந்திக்கட்டும். மக்கள் அவரை அங்கீகரிப்பது குறித்து பிறகு முடிவு எடுக்க முடியும். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் புதிய, புதிய வரவுகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்களால் பெரியளவு சாதிக்க முடியவில்லை.
தற்போதுள்ள சூழலில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் களத்தில் இல்லை என்பதால் அந்த கணக்கை மட்டுமே வைத்து திமுக, அதிமுக கட்சிகளை பலவீனப்படுத்தி விடலாம் என சிலர் நினைக் கின்றனர். தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவை தாண்டி முற்போக்கு ஜனநாயக சக்திகள், சமூகநீதி, அரசியல் கட்சிகள், பல்வேறு கொள்கைகளை பரப்பும் கட்சிகள் உள்ளனர்.
சினிமா புகழ் போன்றவற்றை மட்டுமே மூலாதாரமாக வைத்து எல்லாவற்றையும் ஓரம் கட்ட முடியும் என சொல்லி விட முடியாது. தமிழ்நாட்டு மக்களையும், புதிய இளைஞர் களையும் ஏமாற்றி, ஏய்த்துவிட முடியாது.
இந்தியை படித்தால் உலகத்தில் எங்கும் பணி புரிய முடியுமா? என்றால் இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் இங்கு பணிக்கு வரவேண்டிய அவசியம் என்ன? இந்தியை தாய் மொழியாக கொண்டவர்கள் மூன்றாவது மொழியாக என்ன படிக்கிறார்கள்? தாய்மொழியாக இந்தியை கொண்டவர்கள் மூன்றாவது மொழியாக தமிழை படிக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் காட்ட முடியுமா? ஒன்றிய அரசின் பார்வையின்படி தமிழ் ஒரு பிராந்திய மொழி என்றால், இந்தியும் ஒரு பிராந்திய மொழி தான்’’ என்றார்.