இலங்கைக்கு கஞ்சா கடத்தல்; 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை - தஞ்சை நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

தஞ்சை: இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற 3 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

ஆந்திர மாநிலத்திலிருந்து திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வழியாக பைபர் படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்த சிலர் முயற்சி செய்வதாக நாகை மாவட்ட போதைப் பொருள் தடுப்பு காவல் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, 2023 ஜூன் 6-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தம்பிக்கோட்டை கிழக்கு பாமணி ஆற்றங்கரையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 10 சாக்குகளில் 135 பொட்டலங்களில் 296.5 கிலோ கஞ்சா இருந்தது.

இவற்றைக் கைப்பற்றிய போலீஸார், இதுதொடர்பாக முத்துப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் (45), மகேந்திரன் (32), சசிகுமார் (23) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, தஞ்சாவூர் இன்றியமையா பண்டங்கள் சட்டச் சிறப்பு நீதிமன்றம் மற்றும் மாவட்டக் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை நீதிபதி விசாரித்து, முருகானந்தம், மகேந்திரன், சசிகுமார் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 2 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE