’வைகுண்டருக்கும் சனாதனத்துக்கும் சம்பந்தம் கிடையாது’ - ஆளுநருக்கு அய்யா தர்மயுக வழி பேரவை எதிர்ப்பு

By KU BUREAU

நெல்லை: அய்யா வைகுண்டருக்கும், சனாதனத்துக்கும் சம்பந்தம் கிடையாது. எனவே, அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள் என்ற நூலை தமிழக ஆளுநர் வெளியிடக் கூடாது என்று, அய்யா தர்மயுக வழி பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

திருநெல்வேலி அருகே செங்குளத்தில் நாளை நடைபெறவுள்ள அய்யா வைகுண்டரின் அவதார தின விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கவுள்ளார். இந்த விழாவில் மகாவிஷ்ணுவின் அவதாரம், அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள் என்ற நூலை தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் ஆளுநர் வெளியிடவுள்ளார்.

இது குறித்து, அய்யா தர்மயுக வழி பேரவை தென்மண்டல பொறுப்பாளர் முருகன், மகளிரணி நிர்வாகி ராமலட்சுமி, திருநெல்வேலி மாவட்டச் செயலர் சிதம்பரம் ஆகியோர், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அய்யா வைகுண்டர் சாதி கொடுமையை தகர்த்தெறிந்தவர். பெண் அடிமைத் தனத்தை அகற்றியவர். அடிமை வரி விதிப்பை தகர்த்ததோடு, 18 சாதிகளையும் ஒன்று சேர வலியுறுத்தியவர். அத்தகைய பெருமைமிக்க அய்யா வைகுண்டரை, சனாதனம் என்ற வட்டத்துக்குள் அடைக்க முயல்வது தவறாகும். சனாதனத்துக்கும், அய்யா வைகுண்டருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது.

பிறப்பில் பாகுபாடு பார்க்க கூடாது என்று வைகுண்டர் வலியுறுத்தியுள்ளார். கோயில் கருவறையில் நுழைந்து இறைவனை தொட்டு பணி செய்ய வைத்தார். தலைப்பாகை அணிய வைத்தார். இவற்றையெல்லாம் சனாதனம் ஏற்குமா ? அய்யாவழி பெயரைச் சொல்லி பிரிவினையைக் கொண்டு வருகிறார்கள். எனவே, அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள் என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்துவது தவறானதாகும்.

அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள் என்ற நூலை ஆளுநர் வெளியிடுவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். அய்யா வழியில் சனாதனத்தை புகுத்தினால் அது யாராக இருந்தாலும் கண்டனம் தெரிவிப்போம். இதற்கு எதிராக பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் திருநெல்வேலியில் மாநாடு நடத்த இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE