விஜயலட்சுமி விவகாரம்: வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமானின் வழக்கறிஞர்கள் ஆஜர்!

By KU BUREAU

சென்னை: நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் சீமானின் வழக்கறிஞர்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 2011-ல் புகார் அளி்த்திருந்தார். இதில் போலீஸார் சீமானுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக அண்மையில் நடந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது.
இந்த வழக்கில் போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, இதனடிப்படையில் சீமான் மீதான வழக்கை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விஜயலட்சுமி வழக்கில் இதுவரை 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பெங்களூரில் உள்ள விஜயலட்சுமியிடம் 3 மணிநேரத்துக்கும் மேலாக போலீசார் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.

மேலும், வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று (பிப்.27) சீமானின் வழக்கறிஞர்கள் அவரது சார்பாக நேரில் ஆஜராகினர். சீமான் தற்போது கிருஷ்ணகிரியில் கட்சி ரீதியான பணியில் ஈடுபட்டிருப்பதால் அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல்துறையில் விளக்கமளித்தனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE