வேளாண் பணிகள் இருக்கும்போது 100 நாள் வேலைக்கு தடை: அமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை

By KU BUREAU

சேலம்: பருவமழைக் காலங்கள், அறுவடைக் காலம் ஆகியவற்றின்போது, வேலை உறுதித்திட்டத்தில் 100 நாள் வேலை வழங்குவதை தடை செய்ய வேண்டும். அரசு சார்பில் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வேளாண்மை தனி நிதி நிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும், என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பாக சேலம், நாமக்கல் உள்பட 9 மாவட்ட விவசாயிகளின் கருத்துக்கேட்புக் கூட்டம், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையில், அமைச்சர்கள் ராஜேந்திரன், முத்துசாமி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் சங்க தலைவர் சங்கரய்யா, செயலாளர் கோவிந்தன், மாவட்டத் தலைவர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று, சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.

கோரிக்கைகள் குறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மொத்தம் 1 லட்சம் ஹெக்டேரில் மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலைகள் 900 எண்ணிக்கையில் ஏட்டளவில் இருந்தாலும், 150 தனியார் சேகோ ஆலைகள் சிண்டிகேட் அமைத்து, மரவள்ளிக் கிழங்குக்கு குறைவான விலையை நிர்ணயம் செய்கின்றன. இதனால், மரவள்ளிக்கு போதிய விலை கிடைக்கவில்லை, பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, கூட்டுறவுத் துறை, தொழில் துறை, மாவட்ட தொழில் மையம், சேகோ சர்வ் ஆகியவற்றின் மூலமாக, அரசு மரவள்ளிக் கிழங்கு அரவை ஆலையை அரசு ஏற்படுத்த வேண்டும்.

பயிர் சேதாரம் காணப்பட்டால், பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும், இழப்பீடு வழங்க வேண்டும். மாவட்டத்துக்கு 50 ஆயிரம் கறவை மாடுகள் உள்ள நிலையில், காப்பீடு வழங்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து கறவை மாடுகளுக்கும் காப்பீடு வழங்கவும், ஒரே அளவிலான பிரீமியம் நிர்ணயிக்கவும் வேண்டும். பயிர்களுக்கான சொட்டு நீர் பாசனத் திட்டத்தில், 2-வது முறை சொட்டு நீர் பாசனம் வழங்கும் காலத்தை 7 ஆண்டு என்பதை 3 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைக் காலங்களில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேலை வாய்ப்பு வழங்குவதை நிறுத்தி வைத்தால், விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பர். இதேபோல், அறுவடைக் காலங்களிலும் வேலை உறுதித் திட்டத்தை தடை செய்தால், அறுவடைப் பணிகள் பாதிக்கப்படாது. விவசாய மின் இணைப்புகளுக்கு, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கையை மனுவில் தெரிவித்துள்ளோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE