டிஎஸ்பி, பெண் காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்: சிவகங்கை நீதிமன்றம் அதிரடி உத்தரவு

By KU BUREAU

சிவகங்கை: வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத டிஎஸ்பி, பெண் காவல் ஆய்வாளருக்கு சிவகங்கை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2016 அக்டோபரில் சிங்கம்புணரி காவல் ஆய்வாளர் பொன்ரகு வழக்குப் பதிந்தார். அதைத்தொடர்ந்து முருகேசனை கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு 6 தடவைக்கு மேல் காவல் ஆய்வாளர் பொன்ரகு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, மார்ச் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படி போலீஸாருக்கு நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார்.

பொன் ரகு தற்போது திருநெல்வேலி மாவட்ட குற்றப் பதிவேடுகள் பிரிவில் டிஎஸ்பியாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், தேவகோட்டை அருகே நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவர், 2020 ஆகஸ்ட் மாதம் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபிஉமா போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து ராமனை கைது செய்தார்.

இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்கு 6 தடவைக்கு மேல் ஆய்வாளர் பேபி உமா ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து, மார்ச் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படி போலீஸாருக்கு நீதிபதி கோகுல் முருகன் உத்தரவிட்டார். பேபி உமா தற்போது திருச்சி மாவட்டம் இ.புதூர் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE