பழநி: புளியம்பட்டியில் கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்காததால் வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பழங்குடியின மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
பழநியை அடுத்த பெரியம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது புளியம்பட்டி கிராமம். இக்கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 32 குடும்பங்களுக்கு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்த வீடுகள் கட்டி பல ஆண்டுகளான நிலையில் பராமரிப்புக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன. பல வீடுகளில் மேற்கூரை சேதமடைந்துள்ளது, சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் மேற்கூரை வழியாக தண்ணீர் கசிகிறது. வீடு எப்போது இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் பழங்குடியின மக்கள் உள்ளனர். அசம்பாவிதம் நிகழும் முன்பு தொகுப்பு வீடுகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து தொகுப்பு வீட்டுகளில் வசிக்கும் மக்கள் கூறியதாவது: தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதில் இருந்து ஒரே ஒரு முறை மட்டும் அரசு சார்பில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இங்கு வந்த அதிகாரிகள் புதிய வீடு கட்டப்பட இருப்பதால் வீட்டை காலி செய்யுமாறு கூறினர். நாங்களும் வீட்டை காலி செய்து அருகில் உள்ள மலைக்குன்றில் குடிசை அமைக்க தயாரானோம். அப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு குடிசை அமைக்க அனுமதிக்கவில்லை.
» தமிழை அழிக்க நினைப்பவர்களை விடமாட்டோம்: தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதி
» மின்விநியோக நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல்: தமிழக மின் பகிர்மான கழகத்துக்கு 48-வது இடம்
அதே நேரம் புதிய வீடு கட்டித் தருவதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேறு வழியின்றி மீண்டும் தொகுப்பு வீட்டுக்கு வந்து விட்டோம். வீடு கட்டிக் கொடுப்பதாக கூறிச் சென்ற அதிகாரிகள் பல மாதங்களாகியும் இந்த பக்கம் வரவில்லை. எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள வீட்டில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். போதிய வருமானம் இல்லாதால் எங்களால் வீட்டை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.