சென்னை: ‘உயிர் உள்ளவரை நம் தமிழ் உணர்வு அழியாது. தமிழை அழிக்க நினைப்பவர்களை விடமாட்டோம்’ என்று தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியை இன்னமும் நீங்கள் திணிப்பதால்தான், அதை எதிர்க்கிறோம். திணிக்காவிட்டால், எதிர்க்க மாட்டோம், தடுக்க மாட்டோம். இந்தி எழுத்துகளை அழிக்க மாட்டோம். தமிழர்களின் தனித்துவமான குணம் சுயமரியாதை. அதை சீண்டிப் பார்க்க யார் நினைத்தாலும் அனுமதிக்க மாட்டோம்.
‘ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழித்தால், ரயில் நிறுத்தங்களை வடமாநில பயணிகள் எப்படி அடையாளம் காண்பார்கள்?’ என்று பாஜகவினர் கேட்கின்றனர். இதை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் யாதவ் ஆகியோரிடம் கேட்க வேண்டும்.
திராவிட இயக்கத்துக்கு எந்த மொழி மீதும் பகை கிடையாது. தமிழ், வேறு எந்த மொழியையும் எதிரியாக கருதி அழித்தது இல்லை. அதேநேரம், பிற மொழிகள் தன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அதை ஒருபோதும் அனுமதித்தது இல்லை. அவற்றை விரட்டியடிக்கும் என்பதுதான் நமது பண்பாட்டு வரலாறு.
» விஜய் வீட்டுக்குள் காலணி வீசிய நபரால் பரபரப்பு
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப்.27, 2025
மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை முதலில் நுழைத்து, அதைத் தொடர்ந்து சம்ஸ்கிருதத்தையும் திணித்து, தமிழையும், தமிழர் பண்பாட்டையும் சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசின் உள்நோக்கத்தை புரிந்துகொண்டு தமிழகம் முழுவீச்சாக எதிர்க்கிறது. இதற்கான அடித்தளத்தை திராவிட இயக்க தலைவர்கள் அன்றைக்கே வலுவாக கட்டமைத்துள்ளனர்.
பிறக்கும்போதே தாய்ப்பாலுடன் தமிழ்ப் பாலும் சேர்த்து ஊட்டப்பட்டவர்கள் நாம். உயிர் உள்ளவரை தமிழ் உணர்வு அழியாது. தமிழை அழிக்க நினைப்பவர்களையும் விடமாட்டோம். இருமொழிக் கொள்கையால் பள்ளிக்கல்வி, உயர்கல்வி, திறன் மேம்பாடு, சிறப்பான வேலைவாய்ப்புகள் என தமிழகம் உயர்ந்து நிற்கிறது.
இன்னொரு மொழிப்போர் நம் மீது திணிக்கப்பட்டால், சட்டத்தின் முன்பும், நீதியின் முன்பும் தாய்மொழி உணர்வை நிலைநாட்டி, தமிழை காப்போம். மாநில உரிமைக்கான குரலுடன், தாய்மொழி காக்கும் முழக்கத்தையும் முன்னிறுத்துவோம்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.