மின்விநியோக நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியல்: தமிழக மின் பகிர்மான கழகத்துக்கு 48-வது இடம்

By KU BUREAU

மத்திய மின்துறை வெளியிட்டுள்ள மின்விநியோக நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலில், தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண் பெற்று 48-வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் வீடுகள் உட்பட அனைத்துப் பிரிவுகளுக்கும் மின்விநியோகம் செய்யும் பணியை, தமிழக அரசு நிறுவனமான மின்பகிர்மான கழகம் மேற்கொண்டு வருகிறது. குஜராத், ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

கடந்த 2023-24ம் நிதியாண்டில் நாடு முழுவதும் உள்ள மின்விநியோக நிறுவனங்களின் செயல் திறன் தொடர்பாக, அவற்றின் நிதி நிலைமை, மின்கட்டணம் வசூல், மின்விநியோக செயல்பாட்டை மதிப்பீடு செய்து தரவரிசை பட்டியலை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் 52 அரசு மற்றும் தனியார் மின்விநியோக நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் செயல் திறன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கி ‘ஏ பிளஸ், ஏ,பி,பி, மைனஸ், சி, சி மைனஸ்’ போன்ற கிரேடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், தமிழக மின்பகிர்மான கழகம் 11.90 மதிப்பெண்ணுடன் ‘சி மைனஸ்’ கிரேடு பெற்று 48-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம், இதற்கு முந்தைய ஆண்டான 2022-23 பட்டியலில் ‘சி மைனஸ் கிரேடு’ 50-வது இடத்தில் இருந்தது.

மேலும், இந்த தரவரிசைப் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனமான அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை நிறுவனம் 99.80 மதிப்பெண்ணுடன் முதல் இடத்திலும், குஜராத் அரசின் தக்ஷின் குஜராத் விஜ் என்ற நிறுவனம் 97.50 மதிப்பெண்ணுடன் 2-வது இடத்தையும், உத்தரபிரதேசத்தின் நொய்டா பவர் நிறுவனம் 97.20 மதிப்பெண்ணுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

தரவரிசை பட்டியலில் தமிழக மின்பகிர்மான கழகம் மோசமான நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் மின்இழப்பு 10.31 சதவீதத்தில் இருந்து 12.92 சதவீதமாக அதிகரித்துள்ளது. மின்பயன்பாட்டைக் கணக்கெடுத்து, பில் போடும் திறன் 90.83 சதவீதத்தில் இருந்து 90.08 சதவீதமாக குறைந்துள்ளது. மின்கட்டணம் வசூலிக்கும் நாள் 55-ல் இருந்து 58 நாட்களாக அதிகரித்துள்ளது.

மின்கொள்முதலுக்கு பணம் வழங்குவது 170 நாட்களில் இருந்து 184 நாட்களாக அதிகரித்துள்ளது. மின்கட்டணம் வசூலிக்கும் திறன் 98.75 சதவீதத்தில் இருந்து 96.67 சதவீதமாக குறைந்துள்ளது. அதே சமயம், ஒரு யூனிட் மின்சாரம் விற்பனை மூலமாக கிடைத்த வருவாய் மற்றும் மின்சார செலவுக்கு இடையிலான இடைவெளி 89 பைசாவில் இருந்து 11 பைசாவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE