ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 2 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் கடந்த 2022-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ‘அதிர்ஷ்டத்தை நம்பி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தது செல்லும்’ என்று அறிவித்தது. அதேநேரம் திறமைக்கான ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்தது. இவற்றை விளையாட வயது, நேர கட்டுப்பாடு தொடர்பாக தமிழக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் என கடந்த 2023 நவம்பரில் உத்தரவிட்டது.
அதன்படி, ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பை கட்டாயமாக்கியும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விளையாட முடியாதபடி நேர கட்டுப்பாடு விதித்தும் தமிழக அரசு புதிதாக விதிகளை வகுத்து கடந்த 14-ம் தேதி அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, 18 வயதுக்கு குறைவானவர்கள் ஆன்லைன் விளையாட்டுகளை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. பணம் வைத்து விளையாடவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இந்த விதிகள் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று அறிவிக்க கோரி ப்ளே கேம்ஸ், ஹெட் டிஜிட்டல் ஒர்க்ஸ், எக்ஸ்போர்ட் ப்ளேயர்ஸ் சங்கம் உள்ளிட்டவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
» “எந்த விகிதாச்சார அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு?” - மத்திய அரசுக்கு ஆ.ராசா கேள்வி
» திண்டுக்கல் அருகே சுடுகாட்டுக்கு வரி, மின் கட்டணம் வசூல் - சிறுபான்மையினர் ஆணைய தலைவர் கண்டிப்பு
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் இந்த வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, வி.ராகவாச்சாரி ஆகியோரும், தமிழக அரசு தரப்பி்ல் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் வாதிட்டனர். அதன் விவரம்:
விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு: ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ள நிலையில், நேர கட்டுப்பாடு விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. கேளிக்கை விடுதி, கிளப்களில் ரம்மி விளையாட நேர கட்டுப்பாடு இல்லாத நிலையில், வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் விளையாட நேர கட்டுப்பாடு விதிப்பது பாரபட்சமானது. மேலும், அரசின் நலத் திட்டங்களுக்கு மட்டுமே ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது. தற்போது ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஆதாரை தமிழக அரசு கட்டாயம் ஆக்கியுள்ளதால், தனிநபர் உரிமை பாதிக்கப்படும். எனவே, தமிழக அரசின் விதிகளுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
* தமிழக அரசு தரப்பு: ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் சொத்துகளை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதனால்தான் தமிழகத்தில் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதுதொடர்பான சட்டத்தை உயர் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படியே புதிதாக விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரைதான் அதிகமான இளைஞர்கள் ஆன்லைனில் விளையாடுவதாக நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே வயது, நேரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கட்டுப்பாடு விதிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. இவ்வாறு வாதம் நடந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்