நாமக்கல்: பேருந்து நிலைய இடமாற்றத்தைக் கண்டித்து ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக நகரச் செயலாளர் எம்.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராசிபுரம் நகர மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் புதிய பேருந்து நிலையத்தை இடம் மாற்றும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அணைப்பாளையம் ஏரி ஆயக்கட்டு உரிமை விவசாய நிலங்களை அரசு விதிமுறைகளுக்கு புறம்பாக வகைப்பாடு செய்த வருவாய் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறைகளை மீறி வகைப்பாடு மாற்றப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பின் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன், மதிமுக மாவட்ட அவைத்தலைவர் நா.ஜோதிபாசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, பாமக மாவட்ட செயலாளர் பொன்னுசாமி உள்பட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.