கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: உதவி ஆய்வாளர் உட்பட மூவரிடம் விசாரணை

By KU BUREAU

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் முன்பு உள்ளூர் போலீஸார் நடத்திய விசாரணையின் போது தனிப்படையில் இருந்த உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், வேலுசாமி, மகேஷ் குமார் ஆகியோருக்கு நேரில் ஆஜராக சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. அதே போல், இந்த எஸ்டேட்டில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்துவந்த ஊழியர் தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாகவும் போலீஸார் தனியாக விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தினேஷ் குமார் தொடர்பாக விசாரணை நடத்த, அவர் தற்கொலை செய்து கொண்டபோது ஆம்புலன்சில் ஏற்றிச்சென்ற டிரைவர் கபீர், கோடநாடு பகுதியை சேர்ந்த அதிமுக நிர்வாகி சங்கர் ஆகியோருக்கும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி நேற்று காலை உதவி ஆய்வாளர் மகேஷ் குமார் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கபீர், அதிமுக நிர்வாகி சங்கர் ஆகியோர் கோவை சிபிசிஐடி அலுவலகத்துக்கு விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் சிபிசிஐடி உயர் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE