சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை உச்சகட்டமாக உள்ளது. மனித உரிமை மீறல்களும் அதிகரித்துள்ளன என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
சிவகங்கையில் அவர் நேற்று கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் தீண்டாமை உச்சகட்டமாக உள்ளது. மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளன. இப்பிரச்சினையை தீர்க்க மனிதனை மனிதனாக உருவாக்கும் கல்வி வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். தொழிற்சாலைகள், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
மும்மொழி கொள்கை விவகாரத்தில் தமிழகத்தில் 1965-க்கு முன்பிருந்த நிலையை நினைத்து கொண்டிருக்கின்றனர். திமுக-வைச் சேர்ந்த எத்தனை தலைவர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கின்றனர் ? அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள் மும்மொழியை படிக்கக் கூடாது என்பது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. எந்த மொழியை படிக்க வேண்டும் என தீர்மானிக்கும் உரிமை பெற்றோர், குழந்தைகளிடம் தான் உள்ளது.
தமிழகத்தில் பட்டியலினத்தில் 76 சாதிகள் கணக்கில் இருந்தாலும், தேவேந்திரகுல வேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் ஆகிய 3 சாதியினர் முக்கியத்துவமாக உள்ளன. அருந்ததியருக்கு வழங்கப்பட்ட 3 சதவீத உள்ஒதுக்கீட்டால் மற்ற இரு பெரும் சாதிகளுக்கான வாய்ப்பு பறிபோயுள்ள து. இது மிகப்பெரிய அநீதி. இதை எதிர்த்து நாங்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்த உள்ளோம். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவதாக வாக்குறுதி அளித்த திமுக அதிலிருந்து பின் வாங்கி மத்திய அரசு மீது பழி போடுகிறது.
» பாஜகவில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்
» மே 2026-ல் நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. செய்ய முடியாது என தெரிந்தே அளித்த வாக்குறுதியால் 20 லட்சம் அரசு ஊழியர்கள் ஏமாந்தனர். வரும் தேர்தலின் போதாவது அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். வரும் டிசம்பரில் மதுரையில் மாநாடு நடைபெறவுள்ளது. அதில் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி வியூகங்கள் அறிவிக்கப் படும். இவ்வாறு அவர் கூறினார்.