மதுரை: மாநகராட்சி வழக்கறிஞர் குழு மிக பலவீனமாக இருக்கிறது, அவர்கள் வழக்கு தொடுக்கவோ, வழக்கில் வெற்றி பெறவோ நடவடிக்கை எடுப்பதில்லை என மதுரை மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் நாகராஜன் குற்றம் சுமத்தினார்.
மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. ஆணையர் சித்ரா, துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
மண்டலத் தலைவர் வாசுகி: இந்த மாநகராட்சி நிர்வாகம் பொறுப்பேற்று இதுவரை 36 கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஏற்கெனவே கேட்ட 100 கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்க வேண்டியுள்ளது. அப்பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. கிழக்கு மண்டலத்தில் 11 கண்மாய்கள் உள்ளன. இப்பகுதி வார்டுகளுடைய முக்கிய நீராதாரமான இவற்றை பொதுப்பணித் துறைதான் தூர்வார வேண்டும் என்று நாம் காத்துக் கொண்டிருக்க முடியாது.
மேயர் இந்திராணி: 36 கூட்டங்களிலும் உங்களுடைய கோரிக்கை எதையும் மாநகராட்சி நிறைவேற்றவில்லையா?
» பாஜகவில் இருந்து ரஞ்சனா நாச்சியார் விலகல்
» மே 2026-ல் நன்றி கெட்டவர்கள் தூக்கி எறியப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் கடும் விமர்சனம்
வாசுகி: நான் அப்படி சொல்லவில்லையே, தீர்க்கப்படாத பிரச்சினைகளைத்தான் கூறினேன்.
மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி: ‘அம்ரூத்’ பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டத்தில் ஒரு சொத்து வரிக்கு ஒரு புதிய குடிநீர் இணைப்புதான் வழங்கப்படுகிறது. மதுரையில் ஒரே சொத்து வரியில் 5 முதல் 10 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க முடியாது என மாநகராட்சி கூறுகிறது. ஆனால் நத்தம் புறக்கும்போக்கு நிலத்தில் வீடு கட்டி வசிக்கும் அடித்தட்டு மக்கள், சொத்து வரி கட்டத் தயாராக இருக்கிறோம், வரி நிர்ணயிக்கச் சொல்கின்றனர். மாநகராட்சியினர் ஆவணங்கள் இல்லாமல் வரி நிர்ணயம் செய்ய மாட்டோம் என்கிறார்கள். இப்பிரச்சினையில் மாநகராட்சிக்கும், மக்களுக்கும் இடையில் நாங்கள் திண்டாடுகிறோம்.
மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலை ராஜா: முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை 15 வார்டுகளில் மட்டுமே முடித்துவிட்டு முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக கேள்விப்பட்டேன். 100 வார்டுகளிலும் முடித்தபிறகுதான் செயல்படுத்த வேண்டும். கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்துள்ள பெரும் நிறுவனங்களிடம் வசூல் செய்ய மாநகராட்சி தயங்குகிறது. 10,000 வணிகக் கட்டிங்கள், குடியிருப்பு வரியையே செலுத்துகின்றனர். அவர்களை முன்னாள் ஆணையர் தினேஷ்குமார் கண்டுபிடித்து எடுத்த நடவடிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களிடம் நெருக்கடி கொடுத்து வரி வசூல் செய்யும் மாநகராட்சி, 2 மிகப்பெரிய நகைக்கடைகளிடம் வழக்கை காரணம் காட்டி பல கோடி ரூபாய் வரியை வசூல் செய்யாமல் உள்ளது.
துணை மேயர் நாகராஜன்: மாநகராட்சி வழக்கறிஞர் குழு மிக பலவீனமாக இருக்கிறது. அவர்கள் தொடர் முயற்சி எடுத்து வழக்கு தொடுக்கவோ, வழக்கில் வெற்றி பெறவோ நடவடிக்கை எடுப்பதில்லை. அவர்களை கண்காணிக்கும் அலுவலரும் சரியில்லை. திறமையான வழக்கறிஞர்களை தேர்வு செய்ய வேண்டும். உதாரணத்துக்கு ஹார்விபட்டியில் என்னுடைய பெரும் முயற்சிக்கு பிறகு முன்னாள் ஆணையர் கார்த்திகேயன், முன்னாள் ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோருடைய ஒத்துழைப்பு காரணமாக மாநகராட்சிக்கு சொந்தமான 2 ஏக்கர் 15 சென்ட் இடம் மீட்கப்பட்டது. எதிர்தரப்பினர் வழக்கு தொடுத்தனர் என்பதற்காக, அந்த இடத்தில் இதுவரை மாநகராட்சி வேலியும் போடவில்லை, மாநகராட்சி இடம் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை.
5-வது மண்டல அலுவலகத்துக்கு அருகே கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 40 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தில் கல் ஊன்றிகூட பாதுகாக்கப்படவில்லை. தனியார் ஆக்கிரமிப்பு அங்கு உள்ளது. நோட்டீஸ், வழக்கு என்றாலே மாநகராட்சி அஞ்சுகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான பல இடங்கள் இன்னும் ஆணையர் பெயரில் மாற்றப்படாமல் உள்ளன. அந்த இடங்கள் ஏமாற்றி விற்கப்படுகின்றன அல்லது ஆக்கிரமிக்கப்படுகின்றன. இப்படியே சென்றால் மாநகராட்சியில் பொதுபயன்பாட்டுக்கு இடமே இருக்காது.
ஆணையர் தமிழ் நாளிதழ்களை படிக்கிறாரா?
மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, காங்கிரஸ் கவுன்சிலர் கார்த்திகேயன்: அன்றாடம் நாளிதழ்களில் மாநகராட்சி சாலைகள், குடிநீர், பாதாள சாக்கடை போன்ற பல மக்கள் பிரச்சினைகள் பற்றி அதிக செய்திகள் வருகின்றன. ஆணையர், தமிழ் நாளிதழ்களை படிக்காததால் இப்பிரச்சினைகள் தங்களுக்கு தெரியவில்லை என நினைக்கிறோம்’’ என்றனர்.
ஆணையர்; நான் தமிழ் நாளிதழ்கள் படிப்பதில்லை என்று யார் சொன்னது?
மேயர்: ஆணையருக்கு நன்றாக தமிழ் எழுதவும், படிக்கவும் தெரியும்.