தமிழக காவலர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியக் காவல்படை, பிற மாநில காவல் படைகள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் மிகக் குறைவாக இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.18,200 - ரூ.52,900 மட்டுமே வழங்கப்படுகிறது. இதை குறைந்தபட்சம் ரூ.21,700 - 69,100 என்ற நிலைக்கு உயர்த்த வேண்டும். காவலர் தேர்வின் போது, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டும் தான், தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்கான காவலர் நலத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை, தமிழக அரசால் அமைக்கப்பட்ட ஐந்தாவது காவல் ஆணையம் வழங்கியுள்ளது. அவை அனைத்தும் மிகவும் நியாயமான பரிந்துரைகள் ஆகும்.
தமிழகத்தில் ஐந்தாம் காவல் ஆணையம் அமைக்கப்பட்ட போது, அதன் பதவிக்காலம் 6 மாதங்கள் என்று தான் அறிவிக்கப்பட்டிருந்து. ஆனால், அடுத்தடுத்து கால நீட்டிப்பு வழங்கப்பட்டு, மூன்றாம் ஆண்டு நிறைவடையப் போகும் தருணத்தில் தான் ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. காவல் ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்வதற்கே இரண்டரை ஆண்டுகள் தாமதமாகி விட்ட நிலையில், அதன் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் தமிழக அரசு ஆர்வம் காட்ட வேண்டும். ஆனால், தமிழக அரசோ, ஆணையத்தின் அறிக்கையை கிடப்பில் போடுவதற்கு தான் ஆர்வம் காட்டுகிறது.
அப்படியானால், ஐந்தாம் காவல் ஆணையம் எதற்காக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இது காவலர்களுக்கு இழைக்கப்படும் நம்பிக்கைத் துரோகம் இல்லையா. இந்தியாவின் சிறந்த காவலதுறை தமிழக காவல்துறை தான் என்று தமிழக அரசு மார்தட்டி கொள்கிறது. ஆனால், இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களை விட தமிழகத்தில் காவலர்களுக்கு மிக குறைவான ஊதியம் மட்டும் தான் வழங்கப்படுகிறது. தமிழக காவல்துறையை மிக சிறப்பாக பராமரிக்கிறோம் என்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வரும் தமிழக அரசு அதற்காக தலைகுனிய வேண்டும். இனியும் வெற்று வசனங்களை பேசி கொண்டு இருக்காமல், காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட காவல் ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
» “தமிழை வைத்து பிழைப்பு நடத்த வந்தால் ஏற்க மாட்டோம்!” - பொன். ராதாகிருஷ்ணன்
» தனக்குத் தானே மின்சாரம் பாய்ச்சிக் கொண்டு மென் பொறியாளர் தற்கொலை @ பெருங்களத்தூர்