மதுரை: கன்னியாகுமரியில் மார்ச் 2-ம் தேதி, 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ‘கர்மயோகினி சங்கமம்’ நடைபெறும் என சேவா பாரதி அமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தென் தமிழக சேவா பாரதி தலைவர் டாக்டர் வடிவேல்முருகன் மதுரையில் இன்று செய்தியாளர்களிம் கூறியதாவது: “கன்னியாகுமரியில் அமிர்தா பல்கலைக்கழக வளாகத்தில் தென் தமிழகத்தில் இருந்து 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் ‘கர்மயோகினி சங்கமம்’ மார்ச் 2-ல் நடைபெறுகிறது. ஏவுகணை பெண்மணி டெய்சி தாமஸ் தலைமை வகிக்கிறார். மாதா அமிர்தானந்தமயி ஆசியுரை வழங்குகிறார்.
ஆர்எஸ்எஸ் அகில பாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சுதா சேஷய்யன், பிரித்தாரெட்டி, நிர்மலா அருள் பிரகாஷ், பாரதி ரவிசங்கர் உட்பட பலர் பேசுகின்றனர். பிரதிபலன் எதிர்பாராமல் சேவையாற்றி வரும் பெண்களை கவுரவிக்கும் வகையில் கர்மயோகினி சங்கமம் நடத்தப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
அகில இந்திய சக்ஷம் (மாற்றுத்திறனாளிகள் சேவை அமைப்பு) அமைப்பின் துணைத் தலைவர் காமாட்சி சுவாமிநாதன் கூறியதாவது: “கர்மயோகினி சங்கமத்தின் அடிப்படை விசயம் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பதே. சங்கமத்தின் பொன் மொழி, ‘தாய்மைக்கு நிகரான தவமேதும் இல்லை’ என்பத. பெண்ணுக்கு அவரது திறமை, அவரால் என்ன சாதிக்க முடியும் என்பதை நினைவூட்ட வேண்டியதுள்ளது. இவ்வாறு செய்வதால் சமூகத்தில் இழந்த விழுமியங்களை மீட்டெடுக்க முடியும்.
» உடையார்பாளையம் வழக்கறிஞர் கொலை வழக்கு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை
» சாம்சங் நிறுவனம் வன்மத்தோடு தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளை தொடருகிறது: சிஐடியு குற்றச்சாட்டு
குறிப்பாக தமிழக கலாச்சாரம், தமிழக பண்பாடு ஆகியவற்றை பெண்களால் தான் மீட்டெடுக்க முடியும். பெண்கள் கலாச்சார தூதுவராக இருந்து அவற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்ல வேண்டும். பெண் நினைத்தால் அனைத்தையும் சாதிக்க முடியும். அதற்கான நேரம், இடம் மற்றும் தைரியத்தை பெண்களுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த நோக்கத்தில் தான் கர்மயோகினி சங்கமம் நடத்தப்படுகிறது,” என்றார்.