சென்னை: சாம்சங் நிறுவனம் வன்மத்தோடு தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளைத் தொடருகிறது. சாம்சங் நிறுவனம் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கைவிட வேண்டும் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாம்சங் நிறுவனம் வன்மத்தோடு தொழிற்சங்க விரோத நடவடிக்கைகளைத் தொடருகிறது, 38 நாட்கள் வேலை நிறுத்ததிற்குப் பிறகும் உயர்நீதி மன்ற தீர்ப்பிற்குப் பிறகும் தான் “சாம்சங் இந்திய தொழிலாளர் சங்கம்" பதிவு செய்யப்பட்டது. தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிய பின்னர் முதல் நாளில் இருந்தே தொழிற்சங்கத்தைவிட்டு விலக வேண்டும். வெளித் தலைமையையும் சட்டப்படியாக பதிவு செய்த சங்கத்தையும் நிறுவனம் ஏற்காது என்று தொழிலாளர்களை எச்சரித்து மிரட்ட ஆரம்பித்தது.
எந்த சட்ட அங்கீகாரம் இல்லாத ஒரு குழுவை தொழிற்சாலைக்குள் வைத்துக் கொள்ள மட்டுந்தான் அனுமதிக்கும் என்று நிர்வாகம் கூறியது. நிர்வாகமே பின்னால் இருந்து தனக்கு வேண்டிய சிலரைக் கொண்டு ஒரு கமிட்டியை அமைத்து அதற்கு எல்லா வகையிலும் ஊக்கமும் உதவியும் கொடுத்து வருகிறது. கமிட்டியை ஏற்றுக் கொண்டு கையெழுத்துப் போட்டால் மூன்று லட்சம் ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்பது போன்ற பல சலுகைகளை அறிவித்தார்கள். துறைவிட்டு துறைக்கு இட மாற்றம் செய்து கமிட்டியில் கையெழுத்துப்போட அழுத்தம் கொடுத்தார்கள்.
விடுப்பு கேட்டு விண்ணப்பித்தால், மருத்துவ உதவி கேட்டு விண்ணப்பித்தால், காப்பீட்டு உதவிக்கு விண்ணப்பித்தால் கமிட்டியில் கையெழுத்துப் போட வேண்டும் என்று நிர்பந்தம் செய்யப்பட்டது. இவையெல்லாம் தொழிற் தகராறு சட்டப்படி தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும் ( unfair Labour Practice ) இதன் மீதான புகார்களை கடந்த மூன்று மாதத்திற்கு முன்பே தொழிலாளர் துறையில் சமர்ப்பித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
நிறுவனம் கேஷுவல் தொழிலாளர்களை பயிற்றுவிக்குமாறு தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்தியது. ஒப்பந்த தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்தியது. இவையெல்லாமே அப்பட்டமான சட்ட மீறல்களாகும். ஆனால் அடுக்கடுக்காக புகார்கள் செய்த பின்பும் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை மவுனம் காக்கிறது. அந்த நிறுவனத்திற்குள் நுழைந்து ஆய்வு செய்து தொழிற்சாலைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அந்தத்துறை சாம்சங்கைக் கண்டு அஞ்சி நடுங்குவது ஏன்? அல்லது வேறு மர்மம் என்ன ?
இதுபோன்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இந்த நிலையில் தொழிலாளர்கள் நிறுவனத்தின் உயரதிகாரியை (கொரியாவைச் சார்ந்தவர்) சந்திக்க அனுமதிக் கோரினார். இதற்கு இந்திய மனித வள அதிகாரிகள் குறுக்கே நின்று தடுத்த வண்ணம் உள்ளனர். ஜனவரி 31ம் தேதி அன்று மதிய உணவு இடைவேலையில் உயரதிகாரியை சந்திக்க வேண்டும் என்று கூட்டாக முறையிட சென்றது தான் குற்றம் என்று இதுவரை 23 தொழிலாளர்களை இடைநீக்கம் செய்துள்ளது நிர்வாகம். பதிவு செய்யப்பட்ட சங்கந்தான் நிர்வாகத்திற்குள்ள ஒரே பிரச்சனை. இதில் தொழிற்சங்கம் சமரசம் செய்து கொள்வதற்கு எதுவும் இல்லை.
மூன்று சங்க நிர்வாகிகளை இடை நீக்கம் செய்து பழிவாங்கல் நடவடிக்கையிலும் இதர தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டதை எதிர்த்து பிப்ரவரி 5ம் தேதி முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. தொழிலாளர் துறை கூறிய ஆலோசனையையும், அறிவுரையையும் சங்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் நிறுவனம் எதையும் ஏற்காமல் தொடர்ந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இதுவரை சங்க நிர்வாகிகளை இடை நீக்கம் செய்த வண்ணம் உள்ளது இவையனைத்தும் கண்டனத்திற்கு உரியவை.
தொழிலாளர்துறையும், தொழிற்சாலைகள் துறையும், அரசும் ரத்து செய்யவும் சங்கத்திற்கு எதிராக போட்டி அமைப்பை உருவாக்கி ஊக்குவிக்கும் நடவடிக்கையை நிறுத்தவும். சிறுபான்மை அமைப்போடு 18 (1) ஒப்பந்தம் போட்டு மற்றவர்கள் மேல் திணிக்கிற நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபடாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு தமிழ் மாநிலக் குழு கேட்டுக்கொள்கிறது. தொழிற்சங்க உரிமைக்கான இந்த நியாயமான போராட்டத்திற்கு பேராதரவு தருமாறு தொழிலாளர்களை யும் பொதுமக்களையும் சிஐடியு கேட்டுக் கொள்கிறது” என்று சவுந்தரராசன் தெரிவித்துள்ளார்.