இலவம் காய் விளைச்சல் அதிகரிப்பு: மெத்தை, தலையணை தயாரிப்பு தொழிலாளர்கள் உற்சாகம்  

By என்.கணேஷ்ராஜ்

போடி: ஏற்ற பருவநிலை நிலவியதால் இந்த ஆண்டு இலவம் காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் மெத்தை, தலையணை தயாரிப்பு தொழில் களைகட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

தேனி மாவட்டம் குரங்கணி, முந்தல், சிறைக்காடு, போடி, அரசரடி, சோத்துப்பாறை, கும்பக்கரை உள்ளிட்ட பல பகுதிகளிலும் இலவம் மரங்கள் அதிகம் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் பூ பூத்து பிப்ரவரியில் பிஞ்சுகளாக மாறி பின்பு காய் பருவத்தை அடைகின்றன.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த மழையினால் மரங்களில் அதிகளவு பூ பூத்தது. வெளவால்கள், மந்திகள், அணில்கள் இவற்றை சேதப்படுத்தத் தொடங்கின. இவற்றைத் தடுப்பதற்காக பட்டாசுகளை வெடித்து விவசாயிகள் பிஞ்சுகளை பாதுகாத்தனர். இந்த பருவத்தில் வெயில் அதிகம் தேவைப்படும். இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. இதனால் மரங்களில் இலைகள் உதிர்ந்து காய்கள் திரட்சியாக வளர்ந்துள்ளன.

கடந்த ஆண்டு மழை போன்றவற்றினால் பிஞ்சுகள் வெகுவாய் உதிர்ந்தன. இந்த ஆண்டு இப்பிரச்னை குறைவாக இருந்ததால் மரங்களில் அதிகளவு காய்கள் விளைந்துள்ளன.

இதுகுறித்து மெத்தை, தலையணை தயாரிப்பாளர்கள் கூறுகையில், இலவம் பஞ்சுகளை அடிப்படையாகக் கொண்டு கடமலைக்குண்டு, வருசநாடு, போடி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மெத்தை, தலையணை தயாரிப்புகள் அதிகம் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் இலவம் பஞ்சுகள் அதிகளவில் சந்தைக்கு வரும். இதனால் உற்பத்தியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்றனர்.

விவசாயிகள் கூறுகையில், ''கடந்த ஆண்டை விட விளைச்சல் அதிகமாகவும், காய்கள் திரட்சியாகவும் உள்ளது. மார்ச் கடைசியில் காய்கள் மகசூலுக்கு வரும். ஆனால் காய்பறிப்புக்கு கூலியாட்கள் கிடைப்பதில்லை. கூலியும் அதிகரித்து விட்டது. இடைத்தரகர்களே அதிகம் பயன்பெறுகின்றனர். இதனால் விவசாயத்தில் இலவம் மரங்களை முழுதாக நம்ப முடிவதில்லை. ஆகவே வரப்புகள், தோட்டங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இலவம் விவசாயம் செய்து வருகிறோம்'' என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE