செங்கல்பட்டு: செங்கல்பட்டு அம்மா உணவகத்தில் மின் இணைப்பு பழுது காரணமாக மின்சாரம் தாக்கி ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. செங்கல்பட்டு நகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் நாள்தோறும் பல நூற்றுக்கணக்காணோர் உணவு அருந்தி செல்கின்றனர். இங்கு 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 24 நேற்று பணியில் இருந்த மேனகா என்பவருக்கு திடீரென மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.
அருகில் இருந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்தனர். மின் இணைப்பு பழுது காரணமாக ஏற்கனவே நகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்த நிலையில் சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஊழியர் மின்சாரம் தாக்கியதாக சக ஊழியர்கள் குற்றச்சாட்டு வைக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் இதுவரை மின் பழுது சரி செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த அதிமுக நகர செயலாளர் வி.ஆர்.செந்தில்குமார் தலைமையில் இன்று திடீரென அம்மா உணவகத்தின் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரம் நகராட்சி நிர்வாகம் அம்மா உணவகத்தை சரியாக பராமரிக்கவில்லை என நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.