திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மலைக் கிராமத்துக்கு சாலை வசதி இல்லாததால் 7 கி.மீ., தொலைவு நடந்தே மருத்துவமனைக்கு வந்த முதியவர் மருத்துவமனை முன்பாக சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் டோலி கட்டி கரடு, முரடான மலைப்பாதையில் கொண்டுசென்று அடக்கம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெக்னாமலையில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,200 அடி உயரத்தில் உள்ள இந்த மலைக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மலைப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சரியான சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு வந்து செல்லவும், விவசாய பொருட்களை சந்தைப் படுத்த முடியாமலும், நகர் பகுதிக்கு வர கடும் சிரமத்தை கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவித்து வருகின்றனர். நெக்னா மலைக்கு பாதை வசதி கேட்டு இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பலரிடம் கோரிக்கை விடுத்தும் பாதை வசதி ஏற்படுத்தப்படவில்லை என மலைவாழ் மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நெக்னாமலையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கோவிந்தன் (60) என்பவர் கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். இதைதொடர்ந்து, மலையில் மருத்துவ வசதி இல்லாததால் 7 கி.மீ., தொலைவுள்ள வாணியம்பாடி நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி நேற்று முன்தினம் மாலை மலையில் இருந்து புறப்பட்டார்.
» இந்தித் திணிப்பை எதிர்ப்போம்; நாம் எந்த மொழிக்கும் எதிரியில்லை: முதல்வர் ஸ்டாலின் கடிதம்
» உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: கரூர் தொகுதி மக்களுக்கு சில்வர் அண்டா விநியோகம்!
அப்போது, வாகன வசதி இல்லாததால் மலையில் இருந்து 7 கி.மீ., தொலைவுக்கு கோவிந்தன் நடந்தே வாணியம்பாடி நகர் பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, தனியார் மருத்துவமனை வாசல் வரை வந்த கோவிந்தன் உடல் சோர்வு ஏற்பட்டு மருத்துவமனை வாசலிலேயே மயங்கி கீழேவிழுந்து உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நெக்னாமலையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், கோவிந்தன் உறவினர்கள் வாணியம்பாடிக்கு வந்து அவரது உடலை நெக்னாமலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். நள்ளிரவு நேரம், மலைப்பாதையில் மின் விளக்கு வெளிச்சம் இல்லை, கரடுமுரடான சாலை என்பதால் எந்த வாகனமும் நெக்னாமலைக்கு இயக்க வாய்ப்பில்லை என வாகன ஓட்டுநர்கள் கைவிரித்தனர்.
இதையடுத்து, வேறு வழியின்றி தவித்த நெக்னாமலை இளைஞர்கள் வழக்கம்போல ‘டோலி கட்டி’ கோவிந்தன் உடலை மலைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அதன்படி, 7 கி.மீ., தொலைவுக்கு கோவிந்தன் உடலை டோலி கட்டி வாணியம்பாடியில் இருந்து நெக்னாமலைக்கு நள்ளிரவில் டார்ச் லைட் வெளிச்சத்திலும், தீப்பந்தம் ஏந்தி ஆங்காங்கே நின்று இளைப்பாரி கோவிந்தன் உடலை 6 மணி நேரத்தில் நெக்னாமலைக்கு கொண்டு சென்று அங்கு இறுதிச் சடங்கு செய்து நேற்று அடக்கம் செய்தனர்.
இது குறித்து நெக்னாமலையைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ”கடந்த 76 ஆண்டுகளாக நெக்னாமலைக்கு பாதை வசதி கேட்டு போராடி வருகிறோம். எந்த ஒரு அரசும் எங்களுக்கான அடிப்படை தேவையை நிறைவேற்ற முன்வரவில்லை. மலைப்பாதையில் செல்ல ஆம்புலன்ஸ் வசதி இருந்தும், மலைப்பாதையில் ஆங்காங்கே சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் யாரும் நெக்னாமலைக்கு வர ஆர்வம் காட்டுவதில்லை.
எங்களின் ஒவ்வொரு தேவைக்கும் மலையில் இருந்து 7 கி.மீ.,தொலைவுள்ள வாணியம்பாடிக்கு நடந்து தான் வரவேண்டியுள்ளது. தேர்தல் நேரங்களில் வாக்கு சேகரிக்க வரும் அரசியல் வாதிகள் கூட தேர்தல் முடிந்த பிறகு இந்த பக்கம் கூட வருவதில்லை. நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து நாங்கள் படும் சிரமத்தை எந்த அரசாங்கமும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை.
திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு, நெக்னாமலைக்கு நிச்சயம் சாலை வசதி ஏற்படுத்தப்படும் என அரசு அதிகாரிகள் இங்கு ஆய்வு நடத்தினர். ஆனால், சாலை அமைக்கும் திட்டம் வழக்கம்போல கிடப்பிலேயே உள்ளது. அவசர தேவைக்கு கூட எங்களுக்கு உதவிக்கரம் நீட்ட யாரும் இல்லை என நினைக்கும் போது எதற்காக நாங்கள் வாழ்கிறோம் என்று தான் எண்ண தோன்றுகிறது. எங்களின் நிலையை அறிந்து நெக்னாமலைக்கு விரைவில் சாலை வசதி ஏற்படுத்தி தந்தால் கோவிந்தன் போன்ற பலர் உயிரிழக்க வாய்ப்புகள் இருக்காது” என்றனர் நம்பிக்கையுடன்.