மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

By KU BUREAU

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. மாணவி வன்கொடுமை செய்யப்பட்டது மற்றும் அதுதொடர்பான முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) வெளியான விவகாரம் குறித்து அந்த குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீது முதல்கட்ட குற்றப்பத்திரிகையை சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று ஆன்லைன் மூலம் தாக்கல் செய்தனர்.

பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஞானசேகரனுக்கு உள்ள தொடர்பு குறித்து அதில் முழு விவரங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், ஞானசேகரனின் செல்போன் உரையாடல்கள் அனைத்தும் குற்றப்பத்திரிகையில் தெளிவாக இடம்பெற்றுள்ளன. ஆனால், அதில் அவரது பெயர் மட்டுமே உள்ளதா, அல்லது வேறு யாருடைய பெயரும் உள்ளதா என்பது தெரியவில்லை.

முன்னதாக, ஞானசேகரன் செல்போனில் பேசிய ஆடியோ ஆதாரங்களை உறுதி செய்யும் வகையில், சென்னை மெரினாவில் உள்ள அரசு தடயவியல் துறை கூடத்தில் அவருக்கு 3 மணி நேரம் குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதேபோல, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கில் இவை முக்கிய தடயமாக கருதப்படுகின்றன. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு, இதுதொடர்பான அனைத்து தகவல்களையும் இணைத்து முதல்கட்ட குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

ஞானசேகரனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலம், ஆதாரங்கள், ஆவணங்கள், சொத்து முடக்க நடவடிக்கை, சாட்சியங்கள் ஆகியவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் விசாரணையின் அடிப்படையில், தேவைப்பட்டால் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE