பேச்சுவார்த்தை முடியும் வரை போராட்டம் நடத்தக்கூடாது: ஜாக்டோ-ஜியோவுக்கு நீதிமன்றம் உத்தரவு

By KU BUREAU

சென்னை/மதுரை: பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ--ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டங்களும் நடத்தக்கூடாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சியில் பிப்ரவரி 4-ல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாநில அளவிலான கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து தாலுகா தலைநகரங்களிலும் இன்று (பிப்.25) வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என ஏற்கெனவே உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டதுடன், வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு தடையும் விதித்துள்ளது. அதன் அடிப்படையில், ஜாக்டோ- ஜியோ அறிவித்துள்ள வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் சட்ட விரோதமானது.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும், அது அரசு ஊழியர்களுக்கும், அரசுக்கும் இடையிலான பிரச்சினை. சாலை மறியல் நடத்தினால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மருத்துவமனைகளுக்கு செல்வோர் என அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும்.

எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு, ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேலைநிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டத்துக்கு தடை விதித்தும், போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மீது குற்றவழக்குப் பதிவு செய்யவும், தற்காலிக பணிநீக்கம் செய்து விசாரணை நடத்தி நிரந்தரப் பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘பேச்சுவார்த்தை முடியும் வரை எவ்விதமான போராட்டங்களையும் நடத்தக்கூடாது. மனு தொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க வேண்டும். விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE