திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை: இபிஎஸ் குற்றச்சாட்டு

By KU BUREAU

சென்னை: அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. அதிமுக ஆட்சியில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-ம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, ”ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறோம். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சிறப்பாக இருந்தது. இன்று நாள்தோறும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது வேதனை அளிக்கிறது. தவறு செய்பவர்கள் மீது அதிமுக ஆட்சியில் கடுமையான தண்டனை வழங்கப்பட்டதால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று திமுக ஆட்சியில் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.

வேலியே பயிரை மேய்வது போல ஒரு சில ஆசிரியர்கள் தவறு செய்கின்றனர். திமுக ஆட்சியில் சிறுமிகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகளின் பாதுகாப்பை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும். அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை ஆகியவை இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களாக இருந்தன. ஆனால் இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE