காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே உள்ள கட்டியாம்பந்தல் கிராமத்தில் தாங்கள் கட்டிய தேவாலயத்தை திறக்க விடாமல் தடுத்து வழிபாட்டு உரிமை மறுப்பதாகவும், மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாகவும் பாதிரியார்கள், பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
உத்திரமேரூர் வட்டம், கட்டியாம்பந்தல் கிராமத்தில் சுமார் 40 கிறிஸ்தவ குடும்பங்கள் உள்ளன. இவர்கள் அங்குள்ள சிறு குடிசையில் வழிபாடு நடத்தி வந்தனர். சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் இந்த வழிபாட்டுக்கு வருவதால் புதிய தேவாலயம் கட்ட முடிவு செய்துள்ளனர். 23 ஆண்டுகள் அனுபவத்தில் உள்ள பட்டா இடத்தை கிரையம் வாங்கி தேவாலயத்தையும் கட்டியுள்ளனர். ஆனால் அந்த தேவாலயத்தை திறக்க விடாமல் சிலர் இடையூறு செய்வதாக தெரிகிறது.
இந்நிலையில் பாதிரியார்கள், பொதுமக்கள் என சுமார் 100 பேர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் எங்கள் தேவாலயத்தை திறக்க அந்த கிராமத்துக்கு தொடர்பில்லாத சிலர் மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தடுக்கின்றனர். அந்த கிராம மக்கள் இங்கு தேவாலயம் இருப்பதில் எங்களுக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை என்று மனு அளித்துள்ளனர். இந்த தேவாலயத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் உண்மைக்கு மாறான புகாரை கொடுத்து சிலர் உள்நோக்கத்தோடு தடுத்து வருகின்றனர் என்று மனுவில் கூறியுள்ளனர்.
புதிய தேவாலயத்தை திறந்து நாங்கள் வழிபடவும், எங்கள் வழிபாட்டு உரிமையை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மனு அளிக்கும் நிகழ்ச்சியில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பாதிரியார்கள், 50 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். உத்திரமேரூர் வட்டாட்சியர், உத்திரமேரூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடமும் மனு அளித்துள்ளோம் என்றனர்.
» ‘எழுத்தாளர்களுக்கு தனி நல வாரியம் உருவாக்க வேண்டும்’ - திருச்சி எழுத்தாளர் சங்கம் கோரிக்கை
» தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்