தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் வருகிற ஏப்ரல் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணி வேலைகள் இன்னும் 6 மாத காலம் ஆனாலும் முடிவடைய வாய்ப்பு இல்லை. இதுவரை நடைபெற்றுள்ள பணிகள் அரைகுறையாக மோசமாக செய்யப்பட்டுள்ளது. புனரமைப்பு என்ற பெயரில் கோயிலில் உள்ள மண்டபங்கள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. அவற்றை மேல்பூச்சு செய்து, புனரமைத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
பக்தர்கள் பல்வேறு புனரமைப்புக்காக ரூ.10 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இதுவரை ரூ.1 கோடி அளவுக்கு கூட புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக தெரியவில்லை. பணிகளில் அவசரம் காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது?. எந்த பணியும் நிலைத்து நிற்கும் வகையில் நடைபெறவில்லை. இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது.
அறநிலையத் துறை அமைச்சர் நேரில் தலையிட்டு, அவசர காலத்தில் பணிகள் மேற்கொள்வதை தடுக்க வேண்டும். கும்பாபிஷேக தேதியை குறைந்தது 6 மாத காலத்துக்கு ஒத்திவைத்து, பணிகளை முழுமையாக மேற்கொண்ட பின்னர் ஆன்மிக மக்களின் முழு திருப்தியோடு பணிகளை முடித்து, கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். முறைகேடுகள் குறித்து அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்கு முன்புள்ள திறந்தவெளி பகுதியில் கேட் அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அது அவசியமற்றது. இவ்வாறு அவர் கூறினார்.
» தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
» கொடிவேரி அணை அருகே பவானி ஆற்றங்கரையில் சாய ஆலைக்கு அனுமதி: விவசாயிகள் குற்றச்சாட்டு