‘எழுத்தாளர்களுக்கு தனி நல வாரியம் உருவாக்க வேண்டும்’ - திருச்சி எழுத்தாளர் சங்கம் கோரிக்கை

By KU BUREAU

திருச்சி: மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் உலகத் தாய்மொழி தின விழா, திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க குளிர்மை அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. சங்க சிறப்புத் தலைவர் சௌமா ராஜ ரத்தினம் தலைமை வகித்தார். தலைவர் இந்திரஜித், செயலாளர் விஜயகுமார், பொருளாளர் சங்கரி சந்தானம், துணைத் தலைவர் சூர்யா சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பொதுச் செயலாளர் ஜவகர் ஆறுமுகம் வரவேற்றார். வழக்கறிஞர் தமிழகன், பாட்டாளி, மதனா, முகமது ஷபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில், செம்மை மறந்தாரடி கிளியே என்ற சிறுகதை நூல் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் தனலட்சுமி பாஸ்கரன் நூலை வெளியிட, மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை முன்னாள் கண்காணிப்பாளர் பாஸ்கரன் பெற்றுக் கொண்டார். மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமி சிறப்புரை ஆற்றினார்.

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் உதயகுமார், திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க துணைத் தலைவர் பத்மஸ்ரீ சுப்புராமன், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் கவிஞர் கோவிந்தசாமி, எழுத்தாளர் ஜனனி அந்தோணிராஜ், முனைவர் பூமா ராமநாதன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் தனலட்சுமி பாஸ்கரன் ஏற்புரையாற்றினார். கவிஞர் ஆங்கரை பைரவி நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். நந்தவனம் சந்திரசேகரன் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில், ‘‘தமிழக அரசு, எழுத்தாளர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும். ஸ்ரீரங்கத்தில் பிறந்து தமிழ்த் திரையுலகிலும், இலக்கியத் துறையிலும் பெரும் ஆளுமையாக திகழ்ந்த கவிஞர் வாலிக்கு, காவிரிக் கரையில் அரசு சார்பில் நினைவு மணிமண்டபம் அமைக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்தாளர்கள் மற்றும் நூல்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெறவில்லை. எனவே, எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகமும், மாவட்ட நல நிதிக் குழுவும் இணைந்து வரும் ஆண்டிலிருந்து எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் வகையில் பரிசளிப்பு விழா நடத்த வேண்டும்’’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE