சிவகங்கை அரசு மருத்துவமனை அதிர்ச்சி: ‘எக்கோ’வை தொடர்ந்து ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ மையமும் மூடல்!

By KU BUREAU

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எக்கோவை தொடர்ந்து ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ மையமும் மூடப்பட்டது. இதனால் நோயாளிகள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ‘எக்கோ’ பரிசோதனை மையத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இருதய நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் கூடுதல் மருத்துவர்களை நியமித்து வாரம் முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், பணியிலிருந்த இதய மருத்துவர் ஒருவரும் இடமாறுதலில் சென்றதால், 6 மாதங்களுக்கு மேலாக ‘எக்கோ’ மையம் மூடப்பட்டுள்ளது. இதனால் இதய நோயாளிகள், கர்ப்பிணிகள் ‘எக்கோ’ பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர்.

அதேபோல், அம்மருத்துவமனையில் உள்ள ‘டிஜிட்டல் எக்ஸ்ரே’ மையமும் ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளது. இம்மையத்தில் எலும்பு முறிவு, ஆஸ்துமா, காச நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ரூ.50 செலுத்தி ‘எக்ஸ்ரே’ எடுத்து வந்தனர். நாளொன்றுக்கு 150 பேர் ‘எக்ஸ்ரே’ எடுத்து வந்தனர். தற்போது இந்த மையமும் மூடிக்கிடப்பதால், நோயாளிகளை தனியாரிடம் சென்று ‘எக்ஸ்ரே’ எடுத்து வரச் சொல்கின்றனர். அங்கு ரூ.600 செலவழித்து எக்ஸ்ரே எடுத்து வருகின்றனர். இதனால் நோயாளிகளுக்கு வீண் அலைச்சலும், பண விரயமும் ஏற்படுகிறது.

இதுகுறித்து தவெக மாவட்டச் செயலாளர் முத்துபாரதி கூறுகையில், ‘எக்கோ, டிஜிட்டல் எக்ஸ்ரே மையங்கள் மூடப்பட்டது குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக இம்மையங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ‘இதய மருத்துவர் இல்லாததால் எக்கோ மையம் இயங்கவில்லை. டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரத்தில் பழுதடைந்த பாகத்தை வெளிநாட்டில் இருந்து வரவழைக்க வேண்டியுள்ளது. இதனால், அந்த மையமும் மூடப்பட்டுள்ளது.விரைவில் 2 மையங்களும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE