நீலகிரி: கூடலூர் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் - உதகை சாலை டி.ஆர்.பஜார் லீஸ் பகுதியில் வசிக்கும் தம்பதி சதீஸ், ஷாலினி. கூலி தொழிலாளர்களான இவர்கள், கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்கள். இங்குள்ள தனியார் நிலத்தில் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நித்தீஸ் (4), பிரணிதா (3) ஆகிய மகன், மகள் உள்ளனர். வீட்டின் அருகே விவசாயம் செய்வதற்கு தேவையாக சிறிய அளவிலான குட்டை உள்ளது. இந்நிலையில், வீட்டுக்கு வெளியே நேற்று மதியம் குழந்தைகள் இருவரும் விளையாட சென்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகே தேடியுள்ளனர்.
பின்னர், அருகே இருந்த குட்டையில் பார்த்தபோது குழந்தைகள் இருவரும் நீரில் மூழ்கி இறந்துகிடப்பதை கண்டு கதறி அழுதனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு நடுவட்டம் போலீஸார் சென்று, குழந்தைகளின் சடலங்களை மீட்டு கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.