கோவை அதிர்ச்சி: உயிரிழந்தவரின் உடலை ‘டோலி’ கட்டி 3 கி.மீ. தூரம் சுமந்து சென்ற மக்கள்!

By KU BUREAU

மேட்டுப்பாளையம் அருகே, மலை கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் உயிரிழந்தவரின் உடலை டோலி கட்டி மூன்று கிலோ மீட்டர் வரை பொதுமக்கள் சுமந்து சென்றனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள நெல்லித்துறை ஊராட்சிக்குட்பட்ட கடம்பன்கோம்பை என்னும் மலை கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இங்கு சாலை வசதி கிடையாது. பாதைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளதால் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் வரக்கூடிய அளவுக்கு கூட சாலைகள் இல்லாததால் அவதிப்படுகின்றனர். வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் யாரும் இந்த சாலைகள் வழியாக செல்ல தயங்குகின்றனர்.

இந்நிலையில், நெல்லித்துறை பகுதியை சேர்ந்த மணி என்பவர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் நீராடி கிராமம் வரை கொண்டு வரப்பட்டது. ஆனால், உயிரிழந்தவர் இல்லம் கடம்பன் கோம்பை கிராமத்தில் உள்ள நிலையில் மேற்கொண்டு ஆம்புலன்ஸ் வாகனம் இயக்க இயலாது எனக் கூறி அங்கேயே உடலை இறக்கி விட்டனர். இதையடுத்து, அங்கிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பகுதி மக்களே டோலி கட்டி உடலை தோளில் சுமந்தவாறு எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘நெல்லித்துறை ஊராட்சிக்கு உட்டபட்ட மலை கிராமங்களில் வாகனங்கள் செல்லும் பாதைகளை சீரமைத்து தார் சாலைகளாக மாற்றி தர வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE