ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம்: ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்தவர் கைது

By KU BUREAU

சென்னை: ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பொன்னியம்மன்மேடு, அன்னபூர்ணா நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் ஶ்ரீபிரியா (37). விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவரது நண்பர் மூலம் சேலம் மாவட்டம், ஆத்தூர், புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (40) என்பவரது அறிமுகம் கிடைத்தது.

சிவகுமார் சென்னை வடபழனி, அழகிரி மெயின் ரோட்டில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார். இதை நம்பிய ஆசிரியை ஶ்ரீபிரியா, 2019-ம் ஆண்டு பல தவணைகளாக மொத்தம் ரூ.12 லட்சம் சிவகுமாரிடம் கொடுத்துள்ளார்.

ஆனால், உறுதி அளித்தபடி லாபம் தராமலும், கொடுத்த பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றப்பட்டுள்ளார். இதுகுறித்து கேட்க சென்றபோது சிவகுமார், அவர் நடத்தி வந்த ஆன்லைன் டிரேடிங் நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார்.

அதிர்ச்சி அடைந்த ஶ்ரீபிரியா இதுகுறித்து 2020-ம் ஆண்டு வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, அக்காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

தலைமறைவான சிவகுமார் மற்றும் அவர்களது கூட்டாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. தலைமறைவானவர்களை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றமும் பிடியாணை பிறப்பித்தது.

இந்நிலையில், சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதற்கிடையில், கைதான சிவகுமார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE