சென்னை: சென்னை, கொளத்தூர் அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர் சூட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, கொளத்தூர், பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில் ரூ.210 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இம்மருத்துவமனையில், விபத்து மற்றும் அவசர சிகிச்சை முனைப்பு வார்டுகள், எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, அறுவை அரங்கங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவுகள், ஆண்கள் பொது மருத்துவப் பிரிவு, இரைப்பை குடலியல் பிரிவு, இருதயவியல் பிரிவு, தோல்நோய், புற்றுநோயியல் பிரிவு, நரம்பியல் பிரிவு போன்ற பல்வேறு பிரிவுகளுடன் மொத்தம் 260 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதை விரைவில் திறந்து வைக்கவுள்ள நிலையில், அங்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு “பெரியார் அரசு மருத்துவமனை” என பெயர் சூட்ட முதல்வர் ஆணையிட்டார்.
தொடர்ந்து, கொளத்தூர், ஜெகநாதன் தெருவில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பகிர்ந்த பணியிட மையம் மற்றும் மாணவர்களுக்கான கல்வி மையம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்திலும் முதல்வர் ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்கள், பகிர்வு பணியிடத்தில் பணிபுரிவோர் ஆகியோரிடம் உரையாடி, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். முதல்வர் படைப்பகத்தில் நாள்தோறும் 100 பேரும், கோ-ஒர்க்கிங் ஸ்பேஸில் 40 பேரும் பயன்பெறுவது குறிப்பிடத்தக்கது.
» மேஷம் முதல் மீனம் வரை இன்றைய ஒரு வரி ராசிபலன் @ பிப்.24, 2025
» விராட் கோலி சதம் விளாசல்: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி
ஆய்வின்போது, சுகாதாரத் துறை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ், சென்னை மேயர் ஆர்.பிரியா, எம்.பி.,க்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.