கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

By KU BUREAU

கோவை: கோவை ஈஷாவில் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி விழாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஈஷா யோக மையத்தில் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ள மகா சிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மகா சிவராத்திரி கொண்டாட்ட நிகழ்வில் ஈடுபட்டுள்ள ஈஷா அறக்கட்டளையினர் மற்றும் பக்தர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். மகா சிவராத்திரி, ஆன்மிக ரீதியில் நம்மை மேன்மைப்படுத்தும். இவ்விழா விரதம், தியானம் மற்றும் சுயபரிசோதனைக்கான தருணமாகவும், அறியாமையின் மீதான அறிவின் வெற்றியையும் குறிக்கிறது. மகா சிவராத்திரி போன்ற பண்டிகைகள் புவியியல், கலாச்சாரம், காலம் மற்றும் இடம் ஆகிய தடைகளைத் தாண்டி, மனிதகுலத்தை அமைதி, சமநிலை மற்றும் நல்லிணக்கத்தின் பொதுவான புள்ளியில் இணைக்கின்றன. சத்குரு தலைமையில் நடைபெறும் மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் மகத்தான வெற்றியாக அமையட்டும்” என்று கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்து, சத்குரு தனது எக்ஸ் தளத்தில், ‘‘பிரதமரின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. பாரதத்தின் முக்கியமான விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரியின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும். மனித பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் அனைத்துக்குமான தீர்வுகள் நமக்குளேயே உள்ளன. இதுவே ஆதியோகியின் அடிப்படை” என்று பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி, ஈஷா வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் மற்றும் காவல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE