புதுச்சேரி: இந்தியாவில் உள்ள கல்வி தொழில்நுட்பத்தை அறிய 13 நாடுகளிலிருந்து வந்த சர்வதேச பிரதிநிதிகள் ஆரோவில்லில் முகாமிட்டுள்ளனர். இங்கு மாணவர்களுக்கு கற்றுதரப்படும் கல்வி வழிமுறைகளை கேட்டறிந்து பார்வையிட்டு வருகின்றனர்.
ஆரோவில்லில் உள்ள கல்வி முறை பற்றி அறிந்துகொள்ளவும், மாணவர்கள் அதனுடன் எவ்வாறு இணைந்து செயல்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவும் வந்தனர். இந்தக் குழுவில் ஈக்குவடார். உஸ்பெக்கிஸ்தான், எரித்ரியா, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, மடகாஸ்கர், மொரிசியஸ், மொசாம்பிக், நைஜீரியா, தான்சானியா, ஜிம்பாவே உள்ளிட்ட 13 நாடுகளின் பிரதிநிதிகள் அடங்குவர்.
இந்த நிகழ்வில், லாஸ்ட் ஸ்கூலின் ஆசிரியை ஆரோபென், பள்ளியின் சூழல் மற்றும் தத்துவத்தைப் பற்றி விளக்கினார். அப்போது அவர் கூறுகையில், ''பள்ளி மாணவர்களுக்கு சுதந்திரம் மற்றும் தங்கள் இயல்புக்கு ஏற்ப முன்னேறும் வாய்ப்பை வழங்குகிறது. இது ஒவ்வொரு மாணவரின் தனித்துவத்தையும், அவர்களின் ஆசைகளையும் முக்கியத்துவம் தரப்படுகிறது. இந்த பள்ளி கட்டப்பட்டபோது,
இது ஒரு சாதாரண பள்ளியைப் போல வகுப்பறைகளைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இது ஒரு தெருவைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் கண்காட்சி இடங்கள் உள்ளன. இந்த கண்காட்சிகள் உலகின் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கின்றன. இந்த முறை, இந்திய கலாச்சார கண்காட்சி முக்கியத்துவம் பெற்றது, இது இந்தியாவின் ஆழமான மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களை காட்டுகிறது." என்றார்.
» தமிழும் ஆங்கிலமும் நமக்கு இருமொழி கல்வி: இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் முருகன் கருத்து
அதைத்தொடர்ந்து குழந்தைகள் அதிகநேரம் சமூக ஊடகங்கள், மொபைலில் செலவிடுவது, இங்குள்ள பாடத்திட்டம் உள்பட பல கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு பதில் கூறுகையில், ''பள்ளியில், உடற்பயிற்சி செயல்பாடுகள் மற்றும் பட்டறைகள் மூலம் மொபைல்போனை அதிக நேரம் பார்க்கும் சவாலை சமாளிக்க உதவுகிறோம். இங்கு நடக்கும் பயிற்சிப் பட்டறைகள் மாணவர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. முக்கியமாக படைப்பாற்றல், ஒழுக்கம் மற்றும் குழுவாக இணைந்து பணியாற்றும் திறனை மேம்படுத்தும்.
கலை மூலம் மாணவர்கள் உணர்ச்சிவசப்படலை சீராக்க முடியும். பள்ளியின் கலை மையம், குழந்தைகளுக்கு அவர்களின் உணர்ச்சிகளை கலை வடிவில் வெளிப்படுத்துவதற்கான ஒரு இடமாகும்.
இது அழகு மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்கிறது. ஆரோவில்லில் ஒரு குறிப்பிட்ட பாடத்திட்டம், சான்றிதழ் அல்லது தேர்வு முறை பின்பற்றப்படுவதில்லை. பாரம்பரிய கல்வி முறைகளைப் போலல்லாமல், இங்கு மாணவர்கள் தங்கள் சொந்த வேகத்தில் கற்றுக்கொள்கிறார்கள். சில மாணவர்கள் 20 வயது வரை கல்வியைத் தொடர்கிறார்கள். இங்கு பகுதிநேர மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான வகுப்புகளும் உள்ளன." என்றார்.