ஃபெஞ்சல் புயலின் போது விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த நவ. 30, டிச. 1-ம் தேதி சராசரியாக 55 செ.மீட்டரும், விழுப்புரம் நகரில் 63.5 செ.மீட்டர் கனமழை பெய்தது. இப்பெருமழையில் மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர். புயலினால் பாதிப்படைந்த 5,00,291 குடும்ப அட்டைகளுக்கு அரசின் நிவாரணத் தொகையாக தலா ரூ.2,000 மற்றும் அரிசி, பருப்பு, சர்க்கரை வழங்கப்பட்டது. இதற்கிடையே டிச. 7-ம் தேதி மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே வெள்ளப்பெருக்கில் மாவட்டத்தில் 81,444.06 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட 1,31,745 சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப் பட்டனர். நிவாரணமாக ரூ.121.13 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டது. மேலும் மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு நிலைப் பயிராக இருந்து வரும் பழமரங்கள், மலைப்பயிர்கள், சவுக்கு மற்றும் காய்கறிகள் போன்ற 19253.83 ஹெக்டேர் பரப்பளவிலான தோட்ட பயிர்கள் மழைநீரில் மூழ்கின. இதனால் 27,451 விவசாயிகள் பாதிக்கப் பட்டனர். அதற்கான நிவாரணமாக ரூ.41.31 கோடி நிதி ஒதுக்கீடு கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. மொத்தத்தில் வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறைக்கு ரூ.162.44 கோடி நிவாரணம் வேண்டி அரசுக்கு முன்மொழியப்பட்டது.
இந்நிலையில் கடந்த 17-ம் தேதி அரசு வெளியிட்ட அரசாணைப்படி மாவட்டத்தில் நெல் பயிரிட்ட 72,566 விவசாயிகள் மற்றும் மக்காசோளம், உளுந்து, பனிப்பயிர், நிலக்கடலை, பருத்தி, கரும்பு என 81,444.060 ஹெக்டேரில் பயிரிட்ட 1,31,745 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.121.13 கோடியும், தோட்டப்பயிரான பழமரங்கள், மலைப்பயிர்கள், சவுக்கு மற்றும் காய்கறிகள் என 21903.129 ஹெக்டேரில் பயிரிட்ட 30,567 விவசாயிகள் என 1,62,312 விவசாயிகளுக்கு ரூ.167.83 கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகை இம்மாத இறுதிக்குள் மாவட்ட கருவூலத்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் முன்மொழிவு செய்ததை விட கூடுதலாகவே நிவாரணத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
இத்தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அல்லது வருவாய்துறை மூலம் வழங்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.
» குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
» சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கம் மின்சார ரயில் சேவையில் நாளை மாற்றம்!