“பிரதமர் மோடியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்திக்க தயங்குவது புரியாத புதிர்” - நாராயணசாமி

By அ.முன்னடியான்

புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமி டெல்லி செல்ல தயாராக இல்லை. அவர் ஏன் பிரதமரை சந்திக்க மாட்டேன் என்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி வந்தபிறகு, பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு அடிப்பணிந்து முதல்வரும், கல்வி அமைச்சரும் அவசர அவசரமாக மும்மொழிக் கொள்கையை ஏற்று இந்தி திணிப்பை ஆதரித்திருக்கிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அதேபோல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை கொண்டு வந்து புதுச்சேரி அரசு பள்ளி மாணவ, மாணவிகளின் எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் கூட மிகப் பெரிய அநீதியை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு மத்திய அரசு செய்து வருகிறது. மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால் கல்வித் திட்டத்துக்கு கொடுக்கப்படும் நிதியை கொடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் பேசுகிறார். கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்துள்ள திட்டம். மாநில அரசு ஏற்றுக்கொண்டால்தான் மத்திய அரசு கல்வித் திட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர முடியும். ஆனால் மோடி அரசு வேண்டும் என்றே இந்தி திணிப்பை தமிழகம் மற்றும் தென்மாநிலங்களில் புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளனர்.

மொழி சம்மந்தமாக மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் நிலையை மோடி தலைமையிலான அரசு உருவாக்கியிருக்கிறது. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடப்பதையே இது காட்டுகிறது. புதுச்சேரி தவளக்குப்பம் தனியார் பள்ளியில் 6 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் துன்புறுத்தலை அரசு மூடி மறைக்க முயற்சித்தது. காவல்துறையும் அதற்கு உடந்தையாக இருந்தது. இது ஒட்டுமொத்தமாக விசாரிக்கப்பட வேண்டும். மாநில அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் ஆட்சியாளர்கள் இதுவரை பதில் சொல்லவில்லை.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாலியல் குற்றங்களை தடுத்து நிறுத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது. ரவுடிகள் வெளிப்படையாகவே சித்ரவதை செய்து கொலை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இதை அரசு வேடிக்கை பார்க்கிறது. காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. முதல்வர், உள்துறை அமைச்சரின் தலையீட்டால்தான் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

குற்றவாளிகளை காப்பாற்றும் வகையில் அமைச்சர்கள் செயல்படுகின்றனர். நில அபகரிக்கப்பட்டதாக பொதுமக்கள் புகார் கூறினால், அபகரிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு பரிந்து போலீஸாரிடம் பேசுகின்றனர். உள்துறை அமைச்சர் கடந்த ஆட்சியில் உள்ள புள்ளி விபரங்களை சுட்டிக்காட்டி தற்போது குற்றங்கள் குறைவாக உள்ளதாக கூறியுள்ளார். எங்கள் ஆட்சியில் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி துணைநிலை ஆளுநராக இருந்தார். அவர் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகளவில் நடந்திருந்தால் விட்டு வைத்திருப்பாரா? அவர் அரசாங்கத்தில் தலையிடுகிறார் என்றதால் தான் நீதிமன்றம் சென்றோம். எங்கள் ஆட்சியில் ரவுடிகளை கட்டுக்குள் வைத்திருந்தோம்.

தமிழகம், புதுச்சேரிக்கு நிதி வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் பேரிடர் நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம், புதுச்சேரியை மத்திய அரசு புறக்கணித்துள்ளது. புதுச்சேரி ஆட்சியாளர்கள் மத்திய பாஜக அரசிடம் சரணாகதி அடைந்துள்ளனர். இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்பதில் அரசு நடவடிக்கை திருப்திகரமாக இல்லை.

டெல்லி சென்று காரைக்கால் மீனவர்களை மீட்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். ஆனால் முதல்வர் டெல்லி செல்ல தயாராக இல்லை. அவர் ஏன் பிரதமரை சந்திக்க மாட்டேன் என்கிறார் என்பது புரியாத புதிராக உள்ளது. இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.

தமிழகத்தில் திமுக தலையைில் இண்டியா கூட்டணி வலுவாக உள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி உள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தனித்து போட்டியிட விரும்பலாம். ஆனால் கட்சித்தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும். அமைச்சர் நமச்சிவாயம் என் மீது வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். அவர் வழக்கு தொடரட்டும் என்றுதான் காத்திருக்கிறேன். அவர் வழக்கு தொடர்ந்தால் அவர் மீதான புகார்கள் புற்றீசல்போல வெளிவரும்,” என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE