இந்தி ஆதிக்கத்தால் இதுவரை 25 மொழிகள் அழிந்து போயுள்ளன: முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை

By KU BUREAU

கடலூர்: இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளிம்புக்கு போயிருக்கிறது. ‘இந்தி பெல்ட்’ என்கிற மாநிலங்களில் மட்டும் கிட்டதட்ட 25 மொழிகள் அழிந்திருக்கிறது. தாய்மொழியை இழந்து இந்தி ஆதிக்கத்திற்குப் பலியான மாநிலங்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல விழிப்புணர்வு அடைந்திருக்கிறது. என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.2.2025) கடலூர் மாவட்டம், திருப்பயரில் தமிழ்நாடு பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற “பெற்றோர்களைக் கொண்டாடுவோம்” விழாவில் ஆற்றிய உரையில்,
“‘பெற்றோரைக் கொண்டாடுவோம்’ என்ற இந்த நிகழ்ச்சி பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்குமான நல்லுறவை உண்டாக்குவதற்காக தொடங்கப்பட்டது. பெற்றவர்களுக்கு எந்த அளவுக்கு பிள்ளைகள் மேலே அக்கறை இருக்கிறதோ, அதே அளவு அக்கறை, இந்த அரசுக்கும் இருக்கிறது என்று நிரூபிக்கும் வகையில், இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மாணவர்கள் உள்ளத்தில் நேர்மறை எண்ணங்கள் தோன்றி, சாதனைகள் புரிவதற்கான விழிப்புணர்வையும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடுத்த கட்டத்துக்கு அழைத்துக் கொண்டு செல்வது மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வையும் இந்த மாநாட்டின் மூலமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வழங்கி வருகிறது.
நம்முடைய அரசுக்கு கல்வி, மருத்துவம் இரு கண்கள். இந்த ஆண்டு மட்டும் பள்ளிக் கல்வித் துறைக்கு 44 ஆயிரம் கோடி ரூபாயும், உயர்கல்வித் துறைக்கு எட்டாயிரத்து இருநூறு கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் இருந்தே கல்வித் துறைக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் வழங்கி வருகிறோம் என்பதை நீங்கள் தெளிவாக உணரலாம். அதனால்தான், தரமான கல்வி வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம் பள்ளிக் கல்வித் துறையால் கொண்டு வரப்படுகின்ற பல்வேறு திட்டங்கள்தான். இதை ஒன்றிய நிதித்துறை சார்பில் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையே அங்கீகரித்திருக்கிறது.

அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படையில் அந்த இலக்கை மையமாக கொண்டு, கொரோனா காலத்தில் கற்றல் இடைவெளி, குறைபாடு ஏற்பட்டதை மனதில் கொண்டு, உருவாக்கப்பட்டதுதான் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம். 38 மாவட்டங்களில் 1 இலட்சத்து 8 ஆயிரம் தன்னார்வலர்களால் 30 இலட்சம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். இந்த திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 80 ஆயிரத்து 138 கல்வி மையங்கள் தொடங்கப்பட்டது. அனைவரையும் பள்ளிகளை நோக்கி வரவைக்கும் கல்வியில் சிறந்த திட்டமாக இது தொடங்கப்பட்டது. அதன் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றியும் காட்டியது தான் இந்தத் திட்டம்.

புதிய செயலி மூலமாக பள்ளி செல்லாத 1 இலட்சத்து 88 ஆயிரத்து 487 குழந்தைகள் கண்டறியப்பட்டு உரிய வகுப்பில் சேர்த்து பயிற்சிகள் வழங்கியிருக்கிறோம். பள்ளிகளில் படிக்கும் 16 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் “எண்ணும் எழுத்தும் இயக்கம்” தொடங்கப்பட்டிருக்கிறது. கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இது போன்ற பல்வேறு திட்டங்களின் மூலமாக, பள்ளிக் கல்வி செழுமை பெற்று வருகிறது. இதையெல்லாம் சொல்வது யாரு? ஒன்றிய அரசின் அறிக்கைகள்! ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில், தமிழ்நாட்டின் கல்வித் தரத்தை மனதார பாராட்டி இருக்கிறார்கள். ஒரு பக்கம் நம்மை பாராட்டினாலும், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள்.

ஒன்றிய அரசு 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு தராமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இது 43 இலட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காகச் செலவு செய்யவேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை என்பது, சமூகநீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்கு இது ஆபத்து. எந்த மொழிக்கும் தனிப்பட்ட முறையில் நாம் எதிரிகள் இல்லை. ஆனால், எந்த மொழியை திணிக்க நினைத்தாலும், அந்தத் திணிப்பை எப்போதும் நாங்கள் எதிர்ப்போம். அதில் உறுதியாக இருப்போம்.

இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை; மாணவர்களை பள்ளிக் கூடங்களில் இருந்து விரட்டுகின்ற கொள்கை அது. பள்ளிக்கூடத்தை விட்டு துரத்துகின்ற கொள்கை அது. அதை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உணர்த்தியிருக்கிறோம். தொடர்ந்து உணர்த்துவோம்!
ஒன்றிய அரசின் கொள்கையான என்னென்ன பாதிப்பு வரும் என்பதை சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
· நாம் கடைபிடிக்கின்ற சமூகநீதிக் கொள்கையை நீர்த்துப் போக செய்வது.
· பட்டியலின, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இப்போது உதவித் தொகை வழங்குகிறோம். இதை ஒன்றிய அரசின் திட்டம் மறுக்கின்றது.
· மூன்றாம் வகுப்பில் பொதுத் தேர்வு - ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு - எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று வைத்து பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள்.
· ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வரப் போகிறார்கள். அதாவது ஆல் இண்டியா எக்ஸாம் போல நடக்கும்.
· உங்கள் மகனோ, மகளோ 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் உடனே போய் சேர முடியாது. இப்போது மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு வைப்பது போல, பொறியியல் படிப்புக்கும், ஆர்ட்ஸ் காலேஜ்க்கும் தேர்வு வைத்துதான் எடுப்பார்கள். இதை அந்தக் கல்லூரி நடத்தாது. தேசிய அளவில் தேர்வு ஏஜென்சிதான் நடத்தும். இதைவிட கொடுமை என்ன தெரியுமா?

10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள் அவர்களாகவே வெளியேறலாம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன்… இப்படிச் சொல்வதே படிக்காமல் ‘போ’ என்று விரட்டுவதற்குச் சமமா? இல்லையா?
· 6-ஆம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்கிற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தப் போகிறார்கள். குலத்தொழில், ஜாதித் தொழில் என்று மனுநீதி சொல்கின்ற அநீதியாக தொடராமல், படித்து முன்னேற நினைப்பவர்களை மீண்டும் அதை நோக்கித் தள்ளப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துத்தான் தேசியக் கல்விக் கொள்கைய ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்லுவோம்.

இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டால் தான் 2000 கோடி ரூபாய் கிடைக்கும் - பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்திட மாட்டோம். இரண்டாயிரம் கோடி ரூபாய் பணத்துக்காக இன்றைக்கு நாங்கள் கையெழுத்திட்டால், என்ன ஆகும்? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! 2000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமுதாயம் போய்விடும். அந்தப் பாவத்தை இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஒருபோதும் செய்ய மாட்டான். இங்கே வந்திருக்கின்ற பெற்றோரை... குறிப்பாக தாய்மார்களை கேட்கிறேன். உங்கள் குழந்தைகளின் திறமை வளர வேண்டுமா? இல்லை, மூன்றாவது மொழி திணிக்கப்பட்டு ஒவ்வொரு வகுப்பிலும், படிப்பு தடை படவேண்டுமா?

நம்முடைய குழந்தைகள் திறமை வளர வேண்டும் என்று தானே நினைப்பீர்கள்! இன்னும் தெளிவாக சொல்கிறேன். நாம் எந்த மொழிக்கும் எதிரியல்ல. இந்தி மொழியும் நமக்கு எதிரியல்ல. அதை யார் விரும்புகிறார்களோ அவர்கள் இந்தி பிரச்சார சபாவிற்கு சென்று அல்லது K.V. பள்ளியிலோ - இல்லை வேற வகையிலேயோ படிப்பதை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்ததில்லை. தடுக்கப் போவதுமில்லை. ஆனால், இந்தியை எங்கள் மேல்
திணிக்க நினைக்காதீர்கள். திணிக்க நினைத்தால், தமிழர் என்றொரு இனம் உண்டு. தனியே அவருக்கொரு குணம் உண்டு என்பதை தமிழ்நாடு காட்டிவிடும்!

இருமொழிக் கொள்கையால், தமிழ்நாட்டு மாணவர்களின் திறமை எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றிய கல்வி அமைச்சர் கேட்கிறார், “அனைத்து மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையையும், தேசிய கல்விக் கொள்கையையும் ஏற்றுக் கொண்ட நிலையில், தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?” என்று கேட்கிறார். அவருக்கு நான் சொல்கிறேன். இது தமிழ்நாடு… உயர்தனிச் செம்மொழியை தாய்மொழியாக கொண்ட பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். எங்கள் உயிரைவிட மேலாக தமிழை மதிப்பவர்கள் நாங்கள்! எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்க மொழி நினைத்தாலும் அதை அனுமதிக்க மாட்டோம்.
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் ஒரு கருத்தை நேற்று நாளிதழில் வெளியிட்டிருக்கிறார். அவர் சொல்கிறார். “ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாசாரத்தைப் பின்னுக்குத் தள்ளி மொழியை அழிப்பதே சிறந்த வழி”என்று சொல்லியிருக்கிறார். அவர் பழைய வரலாற்றை சொன்னாலும், அது தமிழ்நாட்டின் புதிய வரலாறாக, கொடிய வரலாறாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் போராடுகிறோம். இன்று நேற்றல்ல, 85 ஆண்டுகளுக்கும் மேலாக, திராவிட இயக்கம் போராடிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகளில் ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளிம்புக்கு போயிருக்கிறது. ‘இந்தி பெல்ட்’ என்கிற மாநிலங்களில் மட்டும் கிட்டதட்ட 25 மொழிகள் அழிந்திருக்கிறது!
தாய்மொழியை இழந்து இந்தி ஆதிக்கத்திற்குப் பலியான மாநிலங்கள் இப்போதுதான் மெல்ல மெல்ல விழிப்புணர்வு அடைந்திருக்கிறது. அதற்கும் தமிழ்நாடு தன் தாய்மொழியான தமிழைத் தற்காத்துக் கொண்டதுதான் காரணம்!
தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை, இன்று இந்தியாவின் ஒவ்வொரு மாநில மொழிகளையும் காக்கின்ற கொள்கையாக மாறிக் கொண்டிருக்கிறது. நிதியை வழங்குங்கள் என்று நாம் கேட்டால், தமிழ் மீது பிரதமர் அக்கறை கொண்டிருக்கிறார் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் சொல்கிறார். அவர்களுடைய அக்கறை தமிழுக்கு என்ன செய்திருக்கிறது?

உங்களுக்கு ஒரு சிறிய sample சொல்கிறேன். நன்றாக கேளுங்கள். சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? 1,488 கோடி ரூபாய். அந்த மொழியை பேசுகிறவர்கள் இந்த நாட்டில் சில ஆயிரம் பேர்தான். எட்டு கோடி மக்கள் பேசும் நம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? வெறும் 74 கோடி ரூபாய். இதுதான் நீங்கள் தமிழை வளர்க்கின்ற இலட்சணமா? நான் உங்களுக்கு உறுதி வழங்குகிறேன். தமிழ்நாடு பள்ளிக் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை என்றாலும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் மாநிலத்தில் செயல்படுத்தப்படுகின்ற திட்டங்கள் எதையும் நிறுத்தாமல், அவற்றைத் தொடர்ந்து நாங்கள் செயல்படுத்துவோம் அது உறுதி.

திராவிடக் கருத்தியல் கொள்கையால்தான் நாம் இன்றைக்கு இத்தனை பெரிய வளர்ச்சியைப் பெற்றிருக்கிறோம். இந்த சாதனைகள் தொடர்ந்து தமிழ்நாடு மேலும் மேலும் வளர்ச்சியடைய வேண்டும் என்றால், நம்முடைய குழந்தைகள் மன வலிமை
உள்ளவர்களாக, உடல் வலிமை உள்ளவர்களாக, அறிவு மேம்பாடு கொண்டவர்களாக வளரவேண்டும். அவர்களை எல்லா விதங்களிலும் திறன் கொண்டவர்களாக மாற்றவேண்டும். தனித்திறமை கொண்டவர்களாக உயர்த்தவேண்டும். அதற்காக தான் என் கனவுத் திட்டமான “நான் முதல்வன்” திட்டம் செயல்பட்டு வருகிறது. அதை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

நான் உங்களுக்கெல்லாம் வைக்கும் வேண்டுகோள் - கல்வியில் மட்டுமல்ல, ஒழுக்கத்திலும் சிறந்தவர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டியது பெற்றோர்கள் - ஆசிரியர்கள் ஆகிய இரு தரப்பினரின் கடமை!
பெற்றோர்கள்தான் குழந்தையின் முதல் ஆசிரியர்கள். ஆசிரியர்கள் தான் குழந்தையின் இரண்டாவது பெற்றோர்கள். இதை உணர்ந்து மேலும் உற்சாகமாக செயல்படுங்கள். உங்களுக்கு உறுதுணையாக உங்களில் ஒருவனாக நான் இருப்பேன். நம்முடைய திராவிட மாடல் அரசு இருக்கும்! இருக்கும்! இருக்கும்! என்று உறுதி கூறி, விடைபெறுகிறேன்’ எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE