உதகை: நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகளும், கேத்தி, ஜெகதளா, உலிக்கல், பிக்கட்டி, கீழ்குந்தா, அதிகரட்டி, கோத்தகிரி, நடுவட்டம், சோலூர், ஓவேலி, தேவர்சோலை ஆகிய 11 பேரூராட்சி களும், 35 ஊராட்சிகளும் உள்ளன. பெரும்பாலான மக்கள் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் வசிக்கின்றனர். குரும்பர், தோடர், இருளர், பனியர், கோத்தர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள், கிராமப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். பழங்குடியினருக்கு மத்திய அரசு ஏராளமான திட்டங்கள் வகுத்தபோதும், பெரும்பாலான திட்டங்கள் உரிய முறையில் அவர்களை சென்றடைவதில்லை.
அதில், பிரதமரின், ‘ஜன்மன்' திட்டத்தின் கீழ், மாநில அரசின் பங்களிப்புடன் மலை பகுதிகளுக்கு, கான்கிரீட் வீடு கட்ட ரூ.5.73 லட்சம் ஒதுக்கப்படுகிறது. இத்திட்டம் பல பழங்குடியினர் கிராமங்களில் செயல்படுத்தப்படவில்லை. மாநில அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்படி, சில கிராமங்களில் மட்டும் வீடுகள் கட்டி தரப்படுகின்றன. குன்னூர் அருகே செங்கல்புதூர் கிராமத்தில் 20 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு 2 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.
மீதமுள்ள குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படவில்லை. இதேநிலை கூடலூர், பந்தலூர் பகுதிகளுக்குட்பட்ட பல கிராமங்களில் நிலவுகிறது. இதுதொடர்பாக பழங்குடியின மக்கள் கூறும்போது, "பெரும்பாலான பழங்குடியின கிராமங்கள் பேரூராட்சியில் சேர்க்கப்பட்டதால், மத்திய அரசின் ‘ஜன்மன்' திட்டத்தை பழங்குடியினர் கிராமங்களில் செயல்படுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது.
அதேபோல், மாநில அரசின் திட்டத்தில் ஒரு லட்சம் ரூபாய் பயனாளிகள் செலவு செய்ய வேண்டும் என்பதாலும், மிகவும் குறைந்த தொகை ஒதுக்குவதாலும், ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியினருக்கு இத்திட்டம் பயனில்லாமல் உள்ளது. உதாரணமாக, செங்கல்புதூர் கிராமத்தில் அரசின் வீடு கிடைக்காத தால், மண் குடிசையில் வாழ்ந்து வருகின்றனர்" என்றனர்.
» சாலையில் நடந்துசென்ற 2 இளம்பெண்களை அவதூறாக பேசி தாக்குதல்: வடபழனியில் ஒருவர் கைது
» பள்ளி ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: நீலகிரி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கைது
வீடு கட்ட சிக்கல் உள்ள நிலையில், வீடுகளை பழுது பார்க்கவும் பல பிரச்சினைகள் உள்ளன. நகராட்சிகளில் 3 சென்ட் நிலம் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது. பேரூராட்சி, ஊராட்சிகளில் 1500 சதுர அடியில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. கிராமப் பகுதிகளில் பல வீடுகள் ஒரு சென்ட்-க்கும் குறைவான இடத்திலேயே கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை புனரமைக்க மக்கள் விரும்பினால், அதற்கு அனுமதி கிடைப்பதில்லை. பல பகுதிகளில் இத்தகைய பழைய வீடுகளை புனரமைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கீழ்குந்தா பேரூராட்சி மஞ்சூர் ஹட்டி கிராமத்தில் திருமணமாகாத பார்வதி மற்றும் அவரது சகோதரி ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். குடியிருக்கும் வீடு நத்தம் பட்டாவில் 1.43 சென்டில் உள்ளது. மேற்கண்ட வீடு 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அவர்கள் கூறும்போது, "வீட்டை புதுப்பிக்க அனுமதி கோரி இணைய வழி மூலமாக விண்ணப்பிக்க முயற்சிக்கும்போது, எங்கள் இடம் 2.50 சென்ட்-க்கு குறைவாக உள்ளதால் விண்ணப்பிக்க இயலவில்லை" என்றனர்.
தற்போது வீடு இடியும் தருவாயில் உள்ளது. இருவரும் அந்த வீட்டில் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் வீடு கட்ட அனுமதி பெற, ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் நடைமுறை உள்ளதால், 3 சென்ட்-க்கு குறைவான நிலம் உள்ளவர்கள் மற்றும் வீடு உள்ளவர்கள் அனுமதி பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. நீலகிரி மாவட்ட உள்ளாட்சி மீட்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறும்போது, “மாவட்டத்திலுள்ள பழங்குடியினர் உட்பட ஏழை, எளிய மக்கள் வசிக்கும் கிராமங்கள் பெரும்பாலும், 11 பேரூராட்சிகளில் இணைக்கப்பட்டுள்ளன.
ஊராட்சியாக இருக்க வேண்டிய இந்த கிராமங்களில், தேயிலை எஸ் டேட்டுகளின் வருமானத்தை கணக்கில் எடுத்து பேரூராட்சிகளாக மாற்றப்பட்டதால் மக்களின் வாழ்க்கை தரம் உயராமல் உள்ளது. 35 ஊராட்சிகளை 93 சிற்றூராட்சிகளாகவும், அனைத்து பேரூராட்சிகளை ஊராட்சிகளாகவும் மாற்றினால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்" என்றார்.