மதுரை சாமநத்தம் கண்மாய்: வலசை பறவைகளால் களைகட்டியது!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை வாழ்விடப் பறவைகளின் இனப்பெருக்க காலமும், வெளிநாட்டு பறவைகளின் வலசை காலமும் உள்ளது. இக்கால இடைவெளியில் அரசு மற்றும் பல்வேறு தன்னார் வல, ஆய்வு நிறுவனங்கள் பறவைகளின் எண்ணிக்கையை கணக்கெடுத்து வருகின்றன. மாவட்டந்தோறும் சமீபத்தில் கல்வி, தொழில் நிறுவனங்களிலும் வளாக பறவைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.

இதன்மூலம் பெறப்படும் பறவைகளின் எண்ணிக்கை தரவுகளை கடந்த காலத்துடன் ஒப்பிட்டு, உயிரினங்கள் வாழும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு இருக்கிறதா? அல்லது பாழடிக்கப்பட்டுள்ளதா? நகர்ப்புற விரிவாக்கம், வளர்ச்சி நோக்கில் சுற்றுச்சூழல் சிதைந்துள்ளதா என அறிய முடிகிறது.

மதுரை மாவட்டத்தில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதி குறைவாகவும், நீர்நிலைகள், வயல்வெளிகள் அதிகமாகவும் உள்ளன. எனவே குளிர் காலத்தில் வலசை வரும் பறவையினங்கள் நாட்டின் தென்முனைக்கும், இலங்கைக்கும் இடம் பெயரும் முன் தங்களின் நீண்டகால பயணத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் தங்கிச் செல்லும் பகுதியாகவும், இளைப்பாறும் பகுதியாகவும் உள்ளது.

மேலும், இதே காலங்களில் உள்ளூர் வாழ்விடப் பறவைகள் நீர்நிலைகளை ஒட்டிய கருவேலம், வேம்பு, புளி நாவல் மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கின்றன. மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பெரியார் நகர் அருகே சாமநத்தம் கண்மாய்க்கு பறவைகள் அதிகளவு வலசை வருகின்றன. வாழ்விட பறவைகள் அதிகளவு இனப் பெருக்கமும் செய்கின்றன.

மதுரை மாவட்டத்தில் பறவை களின் வாழ்நிலை, வாழ்விடச் சூழல் பற்றி இறகுகள் அம்ரிதா இயற்கை அறக்கட்டளை, மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் நிறுவனர் ரவீந்திரன் நடராஜன் கூறியதாவது; சாமநத்தம் கண்மாய்க்கு கிருதுமால் நதியில் இருந்தும், வைகை ஆற்றில் இருந்தும் தண்ணீர் வருகிறது. சுமார் 1000 - 3000 எண்ணிக்கையிலான பறவைகளை இந்தக் கண்மாயில் ஆண்டு முழுவதும் பார்க்க முடியும்.

தற்போது வலசைக்காலம் முடிவுக்கு வரவுள்ளதால் பல இடங்களுக்கு சென்ற பறவை இனங்கள் சாமநத்தம் போன்ற பகுதிகளில் ஒன்று கூடி பாதுகாப்பாக மார்ச் மாதம் மீண்டும் தங்களின் தாய் மண்ணுக்கு திரும்பத் தொடங்கும். சாமநத்தம் கண்மாயில் தற்போது ஆயிரக்கணக்கில் காட்டு வாத்து இனங்கள் கூடியுள்ளன. அதில் தட்டைவாயன், நீலச் சிறகி, சீழ்க்கைச் சிறகி, மற்றும் மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, தென்சீன பகுதிகளில் இருந்து வலசை வந்துள்ள உள்ளான் வகை பறவை இனங்கள் முக்கியமானவை.

இவை தங்களின் நீண்ட வலசை திரும்பலுக்குத் தேவையான உணவை கொழுப்பாக உடலில் ஏற்றுக் கொண்டபின் மார்ச் மாத இறுதியில் இடம்பெயரும். சாமநத்தம் போல மதுரையின் குன்னத்தூர், மாடக்குளம், உரப்பனூர், கரிசல்குளம், கூத்தியார்குண்டு, தென்கால் கண்மாய் போன்ற பகுதிகளிலும் வலசைப் பறவைகள் கூடி உள்ளன.

மேலும், நமது வாழ்விடப் பறவைகளும் குறுவலசைப் பறவைகளும் ஆன மஞ்சள் மூக்கு நாரை, கூழைக்கடா, கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை, நீர்க்காகங்கள், அன்றில் பறவைகளும் அதிகமாக வைகை ஆறு மற்றும் அதை அடுத்த நீர்நிலைப் பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும், மத்திய இந்தியா, இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து இடம் பெயரும் மாங்குயில், பூச்சிப் பிடிப்பான்கள், சோளக் குருவி, கூம்பலகன் போன்ற பறவை இனங்களும் அதிக எண்ணிக்கையில் பசுமலை, நாகமலை, அழகர்மலை போன்ற மரங்கள் அடர்ந்த காடுகள், தோட்டங்கள், கல்லூரி, தொழிற்சாலை வளாகப் பகுதிகளில் உள்ளன.

இரைக்கொல்லி பறவைகளான கழுகு, பருந்து, வைரி போன்ற பறவையினங்கள் சிவரக் கோட்டை, கள்ளிக்குடி, காரியா பட்டி, கரடிக்கல் பகுதிகளின் திறந்த புல்வெளி பகுதிகளிலும், அரிட்டாபட்டி போன்ற மலைக் குன்றுகள் அருகிலும் பரவலாக தங்கி உள்ளன. இயற்கை விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இன்றைய பிற உயிர்களின் அழிவு என்பது நாளைய மனித குலத்தின் அழிவுக்கான தொடக்கமாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

அதனால், இதுபோன்ற நீர்நிலைகளையும், வாழ்விட பறவைகளையும், வலசை வரும் பறவைகளையும் பாதுகாக்க அரசு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE