பிப்​.28-ல் சென்னை வரும் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்​பாட்டம்: செல்​வப்​பெருந்தகை அறிவிப்பு

By KU BUREAU

சென்னை: தமிழகத்துக்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பிப்.28-ம் தேதி சென்னை வரும்போது கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காவிட்டால், தமிழக கல்வித் துறைக்கு சமக்ரா சிக் ஷா அபியான் திட்டத்துக்கு நிதி வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்தோடு அறிவித்தார். இதை எதிர்த்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி மத்திய அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

நாட்டில் 18,500 பேர் மட்டுமே பேசும் சம்ஸ்கிருதத்தை வளர்க்க 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை ரூ.1,074 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் 8 கோடி மக்கள் பேசும் செம்மொழி தகுதிபெற்ற தமிழுக்கு ரூ22.94 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின்படி மும்மொழி திட்டத்தை மத்திய அரசு திணிக்க முயன்றால் அதை தமிழகம் ஏற்காது. தமிழக மொழி போராட்ட வரலாற்றை தர்மேந்திர பிரதான் அறியாத காரணத்தினால் தான் இந்தி மொழியை திணிக்க முயன்று வருகிறார்.

இந்தி பேசுபவர்களுக்கு ஒரு மொழி திட்டம், இந்தி பேசாத மக்களுக்கு மும்மொழி திட்டம் என்பது மிகப்பெரிய அநீதியாகும். தமிழகத்தில் இருமொழித் திட்டத்தை சீர்குலைக்க முயன்றால் அதனால் ஏற்படுகிற கடும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தமிழகத்துக்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், வரும் பிப்.28-ம் தேதி சென்னை வருகிறார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE