மதுரை: மதுரை மாநகராட்சி ‘தலைமை பொறியாளர்’ ரூபன் சுரேஷ், இம்மாதத்துடன் ஒய்வு பெறும்நிலையில் ‘பொறியியல்’ துறையில் அதிகாரமிக்க, செல்வாக்கு பெற்ற அவரது இந்த பொறுப்புக்கு வர தமிழம் முழுவதும் இருந்து முக்கிய அதிகாரிகள் காய் நகர்த்தி வருகிறார்கள்.
மாநகராட்சிகளில் ஆணையருக்கு அடுத்து அதிகாரமிக்க, செல்வாக்கு உள்ள பொறுப்பு பொறியியல் துறையில் உள்ள ‘தலைமை பொறியாளர்’ பொறுப்பு . குடிநீர், சாலை, மழைநீர் வடிகால், பாதாள சாக்கடை, புது கட்டிடங்கள், தெருவிளக்கு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட மாநகராட்சியின் 75 சதவீத பணிகளுக்கு திட்டமதிப்பீடு தயார் செய்வது, டெண்டர் விடுவது, திட்டத்தை செயல்படுத்துவது, கண்காணிப்பது போன்ற பல்வேறு பணிகளை இந்த அதிகாரிகள் மேற்கொள்வார். இவரது ஒப்புதல் இல்லாமல் மாநகராட்சி வார்டுகளில் எந்த ஒரு பணியும் நடைபெறாது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற முக்கிய மாநகராட்சிகளில் இப்பதவிக்கு வருவதற்கு பொறியியல் துறை உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். மதுரை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கடந்த 2 ஆண்டாக பணியாற்றி வருகிறார். இவர், இம்மாதத்துடன் ஒய்வு பெறுகிறார். இந்த பொறுப்புக்கு வர, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், அடுத்த நிலை பதவி உயர்வில் இப்பதவிக்கு வரக்கூடிய கண்காணிப்பு பொறியாளர்கள் தற்போது அமைச்சர் கே.என்.நேரு முதல் உள்ளூர் அமைச்சர்கள் துணையுடன் ஆட்சி தலைமையை அனுகி முயற்சி செய்து வருகிறார்கள்.
ரூபன் சுரேஷ், மதுரை மாநகராட்சி தலைமை பொறியாளர் பதவிக்கு வருவதற்கு முன், திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டாக ‘ஆடு புலி’ ஆட்டம்போல், அடிக்கடி மாநகராட்சி நகரப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் பதவிக்கு அடிக்கடி அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்தான் சமீப காலத்தில் இப்பதவியில் நீண்ட காலம் நீடித்து வந்தார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் தலைமை பொறியாளர் மதுரத்திற்கு பிறகு, அந்த பணியிடம் காலியாகவே இருந்தது. அவருக்கு அடுத்த நிலையில் மாநகர பொறியாளராக பணிபுரிந்து வந்த அரசு என்பவர், ‘பொறியியல்’ பிரிவு தலைமை அதிகாரியாக கூடுதல் பொறுப்பாக பணிபுரிந்து வந்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும், அரசு திடீரென்று கோவை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டார்.
அதன்பிறகு சில மாதங்களிலேயே மதுரை மாநகராட்சிக்கு கண்காணிப்பு பொறியாளராக பதவி உயர்வு பெற்று இடம் மாறுதல் பெற்று வந்தார். அடுத்த சில மாதங்களில் அரசியல் பின்னணியில் திடீரென்று மீண்டும் அரசு வேலூர் மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார். அவரது சொந்த ஊர் மதுரை என்பதால் அவர் மீண்டும் மதுரை மாநகராட்சிக்கு இடமாறுதல் கேட்டு வருவதாக கூறகிறார்கள்.
மதுரை மாநகராட்சியில் தற்போது ஆணையர் புதியவர் என்பதோடு மாநகராட்சி 100 வார்டுகளுடைய முழுமையான விவரமும், அடிப்படை பிரச்சினைகளும் அவருக்கு தெரியவில்லை. அதிகாரிகள் மட்டத்தில் அவர் யாரை நம்பவது, யாரை நம்பக்கூடாது என்ற நிலையில் குழப்பத்தில் இருப்பதாகவும், அனைத்து நடவடிக்கைகளையும் கவனமாகவும், அமைதியாகவும் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு மாநகராட்சி பணிகளில் உதவும் வகையில் உள்ளூரை பற்றி நல்ல அறிமுகம் உள்ள அதிகாரியை நியமிக்க நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் தற்போது வேலூர் மாநகராட்சியில் கண்காணிப்பு பொறியாளராக உள்ள அரசுவை மதுரைக்கு இடமாறுதல் செய்து அதே பதவிநிலையிலேயே தற்போது ரூபன் சுரேஷ் பார்க்கும் ‘தலைமை பொறியாளர்’ பணியிடத்தை கூடுதல் பொறுப்பாக பார்க்கவும் ஆலோசனை சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது,” என்றனர்.
மாநகராட்சி தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ் ஒய்வால் தற்போது மீண்டும் அரசு மதுரை மாநகராட்சிக்கு வருவதற்கான ‘அதிர்ஷ்டம்’ இருப்பதாக மாநகராட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.