மதுரை: தமிழகத்தில் பழங்குடியினருக்கான நலப்பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு ரூ.649 கோடியை எப்போது விடுவிக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசு தமிழகத்தில் வாழும் பழங்குடியினர் மக்களின் நலனுக்காக மத்திய அரசிடம் கோரிய நிதி எவ்வளவு? அதில் மத்திய அரசு வழங்கிய நிதி எவ்வளவு என்று விபரங்களை சமூக ஆர்வலர் மதுரையைச் சேர்ந்த எஸ்.கார்த்திக் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ''பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டு நலத்திட்டங்களை முழுமையாக செயல்படுத்தும் விதமாக மாநில அரசு நிதி போக மத்திய அரசிடம் கடந்த 2018-19 முதல் ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் தமிழக அரசு நிதி கோரி வருகிறது. அவ்வாறு கடந்த 2018-19 முதல் 2023-24 வரையிலான 6 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.812.20 கோடிகள் நிதி கோரியிருந்து. இதில் மத்திய அரசு வழங்கிய நிதியோ வெறும் ரூ.162.59 கோடிகள் மட்டுமே. மீதம் ரூ.649.61 கோடிகள் நிதி பாக்கியை தமிழகத்திற்கு வழங்கப்படாத நிலை உள்ளது.
இந்த 6 ஆண்டுகளில் அதிகபட்சமாக கடந்த 2018-19 நிதியாண்டில் ரூ.170.77 கோடிகள் கோரியிருந்த நிலையில் வெறும் ரூ.10.88 கோடிகள் மட்டுமே வழங்கப்பட்டது. அதாவது 10 சதவீதத்திற்கும் குறைவாக வழங்கியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறான மத்திய அரசின் நிதி முழுமையாக கிடைக்காமல் தமிழகத்தில் பழங்குடியினருக்கான கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டப்பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 275(1) ஒவ்வொரு ஆண்டும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் நலனை மேம்படுத்துவதற்காக இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து உதவித்தொகைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இத்திட்டதின் கீழ் பாதுகாக்கப்பட்ட குடிநீர், சாலை இணைப்பு, மின்சாரம் மற்றும் வீடு போன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. பழங்குடியினர் விவகார அமைச்சகம், இந்திய அரசியலமைப்பின் 275(1) பிரிவின் கீழ்ää பட்டியல் பழங்குடியினரின் நலனை மேம்படுத்துவதற்காக அல்லது அட்டவணைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிர்வாகத்தின் அளவை உயர்த்துவதற்காக மாநில்ஙகளுக்கு மத்திய உதவியை வழங்குகிறது.
சட்டப்பிரிவு 275(1) கீழ் வழங்கப்படும் ஒதுக்கீட்டில் 10 சதவீதம் நல்ல செயல்திறனுக்காக அல்லது நாட்டில் உள்ள பழங்குடியினரின் மேம்பாடு மற்றும் நலன் தொடர்பான புதுமையான திட்டங்களை ஆதரிப்பதற்காக இத்திட்டங்கள் செயல்படுகிறது. ஆனால் மத்திய அரசு பழங்குடியினர் மக்களுக்கு வழங்கவேண்டிய நிதியை வழங்காமல் இருப்பது இந்திய அரசியலமைப்பின் பிரிவு 275(1) மீறுகின்ற செயலாகும். தமிழத்திற்கு வழங்க வேண்டிய ரூ.649 கோடி நிதியை பாக்கியை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும். மத்திய அரசு இந்திய அரசியலமைப்பின் பிரிவு 275(1) முழுமையாக செயல்படுத்துவதை ஒவ்வொரு ஆண்டும் உறுதி செய்ய வேண்டும்,'' என்றார்.