ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி சட்ட ரீதியாக போராட்டம்: ஐஎன்டியுசி அறிவிப்பு

By KU BUREAU

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சட்டரீதியாக போராடுவோம் என, ஆதரவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தூத்துக்குடியில் ஐஎன்டியுசி தேசிய செயலாளர் பி.கதிர்வேல் தலைமையில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தூத்துக்குடியில் தமிழ்நாடு எழுச்சி தொழிலாளர் நலச்சங்கம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், மீனவ சங்கங்கள் உள்ளிட்ட 30 அமைப்புகள் இணைந்து பிப்ரவரி 20ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி பெற்றிருந்தோம். ஆர்ப்பாட்டம் அனுமதியை மாவட்ட எஸ்.பி. திடீரென நிராகரித்து விட்டார்.

ஆர்ப்பாட்டத்துக்கான கோரிக்கைகளில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான கோரிக்கையும் இருப்பதால் நிராகரித் திருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, டிசம்பர் மாதம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம். தினக் கூலி தொழிலாளர்கள் வேலையில்லாத காரணத்தாலும், இன்னும் சிலர் டாஸ்மாக் காரணமாகவும் சமூக விரோதிகளாக மாறி வருகின்றனர். இதனை முறைப்படுத்தி தொழிலாளர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்பது நோக்கம் அல்ல.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் வேண்டும் என்பதுதான் தொழிலாளர்களின் எண்ணமாக உள்ளது. நாட்டில் பல இடங்களில் காப்பர் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. மேலும், புதிதாக 5 காப்பர் தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தூத்துக்குடியில் மட்டும் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. காந்திய வழியில் மட்டுமே ஐஎன்டியுசி போராட்டம் நடத்தும். சட்டரீதியாக நீதிமன்றத்தை அணுகி, அனுமதி பெற்று அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.

தமிழக அரசு குழு அமைத்து, ஆய்வு செய்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE