நெல்லையில் மனைவிக்கு வரதட்சணை கொடுமை: கணவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

By KU BUREAU

திருநெல்வேலி: வள்ளியூர் அருகே வரதட்சணை கேட்டு பெண்ணை கொடுமைப்படுத்திய கணவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்னை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

வள்ளியூர் காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட தளவாய்புரம், கீழத்தெருவை சேர்ந்த முத்துராஜ் (47) என்பவருக்கும் மடத்தச்சம் பாடு, கீழத் தெரு புனித மேரி (41) என்பவருக்கும் கடந்த 2003ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின் கூடுதல் வரதட்சணை கேட்டு முத்து ராஜ் மனைவியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. முத்து ராஜின் தந்தை தர்ம ராஜும், தாய் ரூத் அன்பும் சேர்ந்து புனித மேரியை அவதூறாக பேசி வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். பின்னர் ராணி என்பவரை முத்துராஜ் 2-வது திருமணம் செய்துள்ளார்.

இதனை அறிந்த புனித மேரி, தனது திருமணத்தின் போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை கேட்க கணவர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது முத்து ராஜும், அவரது உறவினர்களும் சேர்ந்து தன்னை அவதூறாக பேசி மிரட்டியதாக புனித மேரி வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் விசாரணை மேற்கொண்டு முத்து ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து முத்து ராஜுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்த் தீர்ப்பு கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE