சேலம்: மத்தியப் பிரதேசத்தில் பூண்டு அறுவடைத் தொடங்கி, வரத்து அதிகமாக இருப்பதால், சேலத்தில் பூண்டு விலை கிலோ ரூ.80 முதல் ரூ.120 என குறைந்துள்ளது. அடுத்த மாதத்தில் ராஜஸ்தானில் பூண்டு அறுவடை தொடங்கும் என்பதால், அதன் விலையில் பெரிய மாற்றம் இனி ஏற்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சமையலுக்கு அத்தியாவசியமானவற்றில் ஒன்றாக பூண்டு உள்ளது. இதனால் பூண்டு விற்பனை எப்போதும் விறுவிறுப்பாகவே இருக்கும். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற மொத்த விற்பனை அங்காடிகள் நிறைந்த சேலம் லீ பஜார், பால் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் உள்ள மொத்த வணிகர்கள், வட மாநிலங்களில் இருந்து, நேரடியாக பூண்டுகளை வாங்கி சேலம் மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் மொத்த விலையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில், வட மாநிலங்களில் பூண்டு அறுவடை தொடங்கிவிட்டதால், சேலத்துக்கு பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மொத்த விலையில் பூண்டு விலை கிலோ ரூ.80 முதல் ரூ.120 ஆக குறைந்துவிட்டது.
இது குறித்து மொத்த விற்பனையாளர் சாகுல் ஹமீது கூறியதாவது: இந்தியாவில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பூண்டு விளைச்சல் அதிகம். இந்த இரு மாநிலங்களில் இருந்து தான், தமிழகத்துக்கு அதிகளவில் பூண்டு மூட்டைகள் வருகின்றன. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பூண்டு அறுவடை தொடங்கி விட்டது.
» அதிமுக கூட்டணியில் இணைகிறதா பாமக? - இபிஎஸ், ஜி.கே.மணி சந்திப்பின் பின்னணி
» புதுப்பொலிவு பெறும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்: ரூ.10.5 கோடி ஒதுக்கீடு!
இதனால், அங்குள்ள விற்பனை மண்டிகளுக்கு நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் கூடுதலான மூட்டைகளில் பூண்டு விற்பனை க்கு வந்து கொண்டுள்ளது. அறுவடை செய்தவுடன் கொண்டு வரப்படுவதால், இவற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே, தற்போது பூண்டு வரத்து அதிகமாகவும், அவற்றின் விலை குறைவாகவும் இருக்கிறது. இதில் தரத்துக்கேற்ப கிலோ ரூ.80 முதல் ரூ.120 வரையிலும் பூண்டு வருகிறது.
இந்நிலையில், ஒரு மாதத்துக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் பூண்டு அறுவடை தொடங்கும். மத்தியப்பிரதேசத்தில் பூண்டு அறுவடை குறைந்துவிடும். எனவே, பூண்டு விலையில் இனி பெரிய மாற்றம் ஏற்படாது, என்றார்.