அதிமுக கூட்டணியில் இணைகிறதா பாமக?: இபிஎஸ் - ஜிகே மணி சந்திப்பின் பின்னணி என்ன?

By KU BUREAU

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி சந்தித்த நிலையில், மீண்டும் பாமக - அதிமுக கூட்டணி அமையலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது. மேலும், அன்புமணிக்கு மீண்டும் அதிமுக ராஜ்யசபா சீட் வழங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

சேலம் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அவரது மகன் தமிழ் குமரன் உள்ளிட்டோர் கடந்த 17 ஆம் தேதி சந்தித்தனர். அப்போது, ஜி.கே. மணி தனது உறவினர் இல்லத் திருமண விழா அழைப்பிதழை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். எடப்பாடி பழனிசாமியுடன் ஜிகே மணி சந்திப்பின்போது கூட்டணி குறித்தும் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது.

2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றது. 2021 தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 5 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் இடம் பெறாத பாமக, பாஜக கூட்டணியில் இணைந்தது. 2024 தேர்தலில் அதிமுக, பாமக, பாஜகவால் ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை.

2019ல் அதிமுக பாமக கூட்டணி அமைக்கப்பட்டபோது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு அதிமுக ராஜ்யசபா சீட் கொடுத்தது. தற்போது அன்புமணியின் பதவி காலம் முடிவடைய இருக்கிறது. எனவே மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்து, அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் பெற பாமக தரப்பில் காய் நகர்த்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இபிஎஸ் - ஜிகே மணி சந்திப்பின்போது இதுபற்றி பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகள் கைகூடும் பட்சத்தில், பாமக, பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக அணியில் இணையலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு நடந்தால், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு மீண்டும் அதிமுக சார்பில் ராஜ்யசபா சீட் வழங்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஜூலை மாதம் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக தமிழக அரசியலில் பல புயல்கள் கிளம்பலாம்.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE