புதுப்பொலிவு பெறும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம்: ரூ.10.5 கோடி ஒதுக்கீடு!

By KU BUREAU

மதுரை: மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்தை மறுசீரமைக்க மாநகராட்சி அனுப்பிய திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி தமிழக அரசு ரூ.10.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. பேருந்து நிலையத்தின் மேற்கூரை சிதிலமடைந்து அடிக்கடி காங்கீரிட் பூச்சு உதிர்ந்து விழுகிறது. கழிப்பறைகள் போதிய பராமரிப்பின்றி கடும் தூர்நாற்றம் வீசுகின்றன. பேருந்து நிலையத்தின் வளாகத்தில் உள்ள தார் சாலைகள், கற்கள் பெயர்ந்து பள்ளங்களாக காணப்படுகின்றன. ஒரு காலத்தில் ஐஎஸ்ஓ தரச்சான்று பெற்று அழகாகவும், சிறப்பாகவும் பராமரிக்கப்பட்ட மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மோசமான நிலையில் உள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க முன்பு மாநகராட்சி ஆணையராக சிம்ரன்ஜீத் சிங் காலோன் திட்ட அறிக்கை அனுப்பிய போது, வெறும் ரூ.1 கோடி மட்டுமே தமிழக அரசு நிதி ஒதுக்கியது. அந்த நிதியைக் கொண்டு பேருந்து நிலையத்தை முழுமையாக பராமரிக்க முடியவில்லை. பின்னர் ஆணையராக வந்த தினேஷ்குமார், ரூ.14 கோடி நிதி கேட்டு புதிய திட்ட அறிக்கையை தயார் செய்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

தற்போது அவரது திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி ரூ.10.5 கோடி நிதியையும் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைவில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தை மறுசீரமைக்க உள்ளது. நடைமேடைகளை பராமரிப்பது, வாகன பார்க்கிங்கை மேம்படுத்துவது, சிதிலமடைந்த மேற்கூரை பூச்சை அப்புறப்படுத்தி புதிதாக பூசுவது, பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள சாலைகளை அமைப்பது, கழிப்பறைகளை புதுப்பிப்பது போன்ற பல்வேறு பணிகள் நடக்க உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE