பொள்ளாச்சி: வேட்டைக்காரன் புதூர் அழுக்கு சித்தர் ஜீவ சமாதியில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று வழிபாடு மேற்கொண்டார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் ஆன்மீக குருவாக சேலம் அப்பா பைத்தியம் சுவாமிகள், பொள்ளாச்சி வேட்டைக்காரன்புதூர் அழுக்குசித்தர் என அழைக்கப்படும் அழுக்கு சுவாமி ஆகியோர் விளங்குகின்றனர். இதில், அழுக்கு சித்தரின் ஜீவசமாதி, பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக் காரன் புதூரில் உள்ளது. முக்கிய நிகழ்வுகளின் போது, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இங்கு வந்து வழிபடுவது வழக்கம்.
அதன்படி, அழுக்கு சித்தர் ஜீவசமாதியில் பூ, பழம் வைத்தும், மாலை அணிவித்தும், சிவபுராணம் பாடியும் நேற்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீபாராதனை செய்து வழிபாடு செய்தார். இதைத்தொடர்ந்து, அங்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் எலுமிச்சம் பழம், பிரசாதம் வழங்கினார். பின்னர், அழுக்குசாமி ஜீவ சமாதியில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.