கோவை: தமிழகத்தில் இவ்வாண்டு கோடை கால தினசரி மின் தேவை 22 ஆயிரம் மெகாவாட்டை கடந்துவிடும் என எதிர்பார்ப்பதாகவும், சூரிய ஒளி, காற்றாலை மின் உற்பத்தி திட்டங்கள் சீரான மின் விநியோகத்திற்கு உதவும் எனவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தால் ஆண்டுதோறும் கோடை காலத்தில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் இவ்வாண்டு கோடை காலம் தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ‘ஏசி’, ‘ஏர் கூலர்’ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு கோடை காலத்தில் தினசரி மின்தேவை அதிகபட்சமாக 20,830 மெகாவாட்டாக உயர்ந்த நிலையில் இவ்வாண்டு 10 சதவீதம் அதிகரித்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு சூரியஒளி மின்உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா கூறியதாவது: “இவ்வாண்டு தமிழகத்தில் கோடை கால தினசரி மின்தேவை மிகவும் அதிகரிக்கும். 25 ஆயிரம் மெகாவாட்டை கடக்கவும் வாய்ப்பு உள்ளது. சூரிய ஒளி காற்றாலை மூலம் மின் உற்பத்தி தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் கோடை கால தினசரி மின் தேவையில் சூரிய ஒளி திட்டம் மூலம் 7,500 மெகாவாட் வரை மின் உற்பத்தி கிடைக்கும்.
» டெல்லி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் ரங்கசாமி கலந்துகொள்ளாதது ஏன்?
» காஞ்சிபுரம் மெத்தை, தலையணை தயாரிப்பு தொழிற்கூடத்தில் தீ விபத்து
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இவ்வாண்டு கோடை கால மின் தேவை மிக அதிகமாக உயரும். அதனை எதிர்கொள்வது அந்தந்த மாநில அரசுகளுக்கு மிகுந்த சவாலாக இருக்கும். மின்தடை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என கணக்கிடப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் கூறும் போது, ‘‘தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்பு 10 ஆயிரம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. விரைவில் காற்று சீசன் தொடங்க உள்ளது. எனவே, கோடை கால மின் தேவையை சமாளிக்க காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உதவும்’’ என்றனர்.
தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தின் (டீகா) தலைவர் பிரதீப் கூறும் போது, ‘‘கடந்தாண்டு தமிழ்நாட்டில் கோடை கால தினசரி மின்தேவை 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்தது. இவ்வாண்டு 10 சதவீதம் கூடுதலாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. தினசரி தேவை 22 ஆயிரம் மெகாவாட்டை கடந்தாலும் தமிழக அரசு அதற்கேற்ப முன்னரே திட்டமிட்டு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்தாண்டு கோடை காலத்தில் மின்தடை ஏற்படாமல் அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இம்முறையும் அதே போன்று நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்புகிறோம்’’ என்றார்.