புதுச்சேரி: டெல்லி முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தும் இம்முறையும் டெல்லி செல்லாமல் வாழ்த்துடன் புதுச்சேரி முதல்வர் ரங்காமி முடித்துக்கொண்டார். இம்முறை பதவியேற்றதிலிருந்து நான்கு ஆண்டுகளில் 3 முறை மட்டுமே டெல்லி சென்றுள்ளார்.
புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சி அமைத்தவுடன் நியமன எம்எல்ஏக்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி ஆகியவற்றை பாஜகவே எடுத்துக் கொண்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவரான ரங்கசாமியிடம் கலந்து ஆலோசிக்கவில்லை. இந்நிலையில், மக்களவை தேர்தலிலும் பாஜகவே போட்டியிட்டது.
மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டத்துக்கு புதுச்சேரி தலைவரான முதல்வர் ரங்கசாமியை அழைத்தனர். ஆனால், அவர் செல்லவில்லை. அதையடுத்து மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்தும் அவர் செல்லவில்லை.
அதன்பிறகு மத்திய அரசு கூட்டங்களுக்கு அழைப்பு வந்தும் அவர் பங்கேற்றதில்லை. இம்முறை டெல்லி முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் உள்ள முதல்வர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருந்தது. பல மாநில முதல்வர்கள் பங்கேற்ற நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இம்முறையும் டெல்லி செல்லவில்லை. வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார்.
» காஞ்சிபுரம் மெத்தை, தலையணை தயாரிப்பு தொழிற்கூடத்தில் தீ விபத்து
» “கொசு கடித்தால் தாங்க முடியாது...” - ஓபிஎஸ் மீதான ஜெயகுமாரின் விமர்சனத்துக்கு புகழேந்தி பதிலடி
முதல்வர் தரப்பில் விசாரித்தபோது, “புதுச்சேரி பிராந்தியமான கேரளம் அருகேயுள்ள மாஹேயில் மலர் கண்காட்சிக்காக முதல்வர் ரங்கசாமி சென்று விட்டு, இன்று வரும் வழியில் பொள்ளாச்சியில் அழுக்கு சாமி சித்தர் கோயிலில் சாமி தரிசனம் செய்து புதுச்சேரி பிறப்பட்டார்” என்றனர்.
இதுவரை முதல்வர் எத்தனை முறை டெல்லி சென்றுள்ளார் என்று அமைச்சரவை அலுவலக பொது தகவல் அதிகாரி அளித்த தகவலில் கடந்த 2021 முதல் 2024 வரை அலுவலக பதிவேடுகளில் உள்ளபடி முதல்வர் 3 முறை அரசு பயணமாக டெல்லி சென்றுள்ளார் என்று தெரிவித்தனர்.