மதுரை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த, பாலகுமரன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'பள்ளி கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தேன். என்னை ஆய்வக உதவியாளராக பணியிறக்கம் செய்து தேனி முதன்மை கல்வி அலுவலர் கடந்த ஆண்டு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தேன். அதில் என்னை மீண்டும் இளநிலை உதவியாளராக நியமிக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஏ.கே.மாணிக்கம் வாதிட்டார். பின்னர் நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்திராணிக்கு, 3 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும், மேல்முறையீடு செய்ய வசதியாக தண்டனையை பிப். 21 வரை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
» கிருஷ்ணகிரி அருகே அதிர்ச்சி: பாறை புதரில் 10 அடி நீளம் கொண்ட 6 மலைப் பாம்புகள் மீட்பு!
» தமிழகத்துக்கு ஒரு ரூபாயும் நிவாரண நிதி வழங்காமல் புறக்கணிக்கும் மத்திய அரசு: முத்தரசன் கண்டனம்
இந்நிலையில் தண்டனையை ரத்து செய்யவும், அதுவர தடை விதிக்கவும் கோரி இந்திராணி தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. அதனை கருத்தில் கொள்ளாமல் தனி நீதிபதி தண்டனை விதித்துள்ளார். எனவே தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.